பெயர்த் தெரியாத பூ

பெயர்த் தெரியாத பூ - வாசிப்போர் வாசிக்கலாம்
********************************************
எங்கோ
பிரபஞ்சத்திலேயே
ஓர் உயர்ந்த
திண்ணிறை மண் குவியலின்மேல்
பெயர்த் தெரியாத
ஒற்றைப் பூவொன்று இருப்பதாகவும்
அதன் இதழ்களின் தேஜஸ்
லட்சம் பௌர்ணமிகளாய் ஜொலிக்கின்றதாகவும்
இலைகளே முளைக்காத
அப்பூவின் நாளத்தின் ஆட்டம்
பெருங்கவிகள் பாடும்
ரொமேன்டிக் வரிகள் என்ற
மகுடியில் மயங்கும்
கால சர்ப்பம் போல இருக்கின்றதாகவும்
ஊர்க்கோடியில் யாரோ
தண்டோராவினால்
பறைசாற்றிக் கொண்டிருந்தார்கள்
அப்பூவைப்
பறித்துவருவோருக்கு
அக்குறுநில அரசு
இனாம் அறிவித்திருந்தார்கள்
பதினான்கு தீவுகளையும்
இருபத்தி ஒன்று மலைகளையும்
கடந்தாகவேண்டும்
இவைகளின் கட்டமைப்பு
ஓர் ஐம்பங்குல சதுர கித்தானில்
வரைப்படமாக்கப்பட வேண்டும்
நாழிகை, விநாழிகை, லிப்தம், விலிப்தம்
ஓரை, மணித்தியாலம்,
முகூர்த்தம், சாமம், பொழுதுகள்
பட்சம், அரைக்கால் மனித ஆயுள் வட்டம்
(பதினைந்து வருடங்கள் எனப்படும்
முப்பது அயனங்கள்"" இப்படி
பயணக்கால நீளத்திற்கான
துல்லிய கணக்கீடு பண்ணவேண்டும்
இடி மின்னல் மழை
கடுங் கூதிர் போன்ற
இயற்கை வாதைகளிலிருந்து
தற்காத்துக்கொள்ள மூலிகைகள்
இடைத்தாவளம் அடிசில் ஆடை காலணிகள்
ஆயுதங்களை சாணைப்பிடிக்கும்
அங்காடிமனைகள்
தீவுகளைக் கடக்க
கட்டுமர ஆலைகள்
மலைகளில் நடக்கவென
தரிக்கயிறுகளும் நங்கூரங்களும்
கால்நடைக்கு கொள்ளுப்பருத்தியும் என
கொள்ளை அடிக்க
இவைகளுக்கான ஸ்தலங்களை
குறிப்பு செய்யவேண்டும்
அத்தத்தில் எதிரிகளை எதிரிடும்
புத்தி கூர்மை
அவர்களின் உயிருக்கு ஏதும்
ஆகாதவாறு தாக்கிவீழ்த்த போதுமான
ஆயுத யுத்திகள் என
என்னை தயார் செய்யவேண்டும்
நான் கடற்கொள்ளையன்
என்னும் அடையாளத்திற்கான
இலச்சினை தயார் செய்தாக வேண்டும்
தயார் செய்தாயிற்று
ஆறு இரவுகள் ஏழுபகற்கள் கட்டமைத்தாயிற்று
என் புரவியில்
அன்றைய பொழுதிற்கான
சோற்றுப்பொதிகளையும்
இடைத் தாவளங்களில்
தாகம் தீர்த்துக்கொள்ள
அத்யாவசிய தண்ணீரையும்
ஆயுதங்களையும்
எடுத்துக் கொண்டு
அப்பூவின் இலக்கினூடே
பயணப்பட்டிருந்தேன்
அத்தத்தில் தென்படுவன யாவும்
ஆவி பறிக்கும் கடும் மாயப்பழனங்களே
ஒண்ணே கால் முதுமகனாகிவிட்டிருந்தேன்
என் இலக்கை அடைந்தபோது
மனிதர்கள் என யாரையும்
அங்கே காணவில்லை
மண் குவியலோ
நான்கு பூமியின் கனத்தில்
அப்பூவின் இதழ்களுடைய
சந்திர தேஜஸ் சூழ அமர்ந்திருந்தது
நாற்பத்தைந்து பாகைக்கோணத்திற்கு மேலும்
வளைந்தபோதும்
அப்பூவை காணமுடியவில்லை
சரியான ஓரைக்காக
காத்திருக்கவேண்டும்
அது காற்று வீசும் காலமாக இருக்கிறது
மணற்சுழற்சி விழுங்கிவிடும்
அபாயமும் இருக்கிறது
காற்று வீசும் திசையில் பயணப்படாமல்
காற்றின் எதிர் திசையில்
முன்னோக்கி புரவியை செலுத்தவேண்டும்
உபயோகித்த ஆடைகளை
கந்தலாக்கி,, ஒருசேர இணைத்து
போதுமான அகல நீளத்துடன்
பெருந்திரை ஒன்றினை நெய்து
புரவியின் கழுத்தோடு கட்டி
பின்னோக்கி பறக்க விடவேண்டும்
இவற்றின் செயலாக்கங்களில் இருந்தபோதே
எங்கோ தொலைவிலிருந்து
முரசொலி முழங்க
மனித இனமல்லாத கூக்குரல் கேட்கிறது
ஆங்காங்கே மணற் சுழற்சிகள்
எழத் தொடங்கின
கூகைகள் கரைந்தபடி
என் தற்காலிக இருப்பை மிரட்டிக் கடந்தன
முரசொலியின் முழக்கமும்
கூக்குரலும் நெருங்கிக் கொண்டிருந்தது
அந்த மணற் குவியலுக்கு
கீழே இருந்த
அடர்வனத்தில்
ஒரு மரத்தின் மேல் அமைத்த
என் குடிலின் ஹரிக்கேன் விளக்கை
ஊதி அணைத்துவிட்டு
காலதரின் வழியே
வருபவர்கள் யாராக இருக்கலாம் என
மறதியில் கூட
விழி இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன்
முரசொலியும் கூக்குரலும்
இப்போது அப்பூவின் சாந்திரப் பிரகாசத்தில்
நன்றாகவே தென் படுகிறது
ஆம்,, அவர்கள்
மனிதர்களே அல்லாத
எண்ணிக்கைக்குள் அடங்காத அரக்கர்கள்
என் குடிலை கடந்தபோதே
என் நர வாசத்தை உணர்ந்திருப்பார்கள்
அவர்களின் செயலை
கூர்ந்து கவனிக்கத் தொடங்கினேன்
எல்லோரும்
மணற் குவியலை நெருங்கிக் கொண்டிருந்தார்கள்
அந்த மணற் குவியலை அடைந்ததும்
அவர்களின் இஷ்ட தேவதையை வணங்கிவிட்டு
குவியலின் மேல்
ஒருவரையொருவர் முண்டி மோதி
ஏறி ஓடத் தொடங்கினார்கள்
அவர்களுடைய ஆளுமையை
தாங்க இயலாத அந்த மண் குவியல்
பிடிமானம் விட்டு
கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கம் அறுந்து
உடைந்து சரியத் தொடங்கியதும்
அப்பூவின் இதழ்களும்
அதைச்சுற்றியுள்ள ஒளியும் காட்சிகொடுத்தன
மேலும் சரிந்துகொண்டே இருக்க
வெண்ணிற நாகத்தைப்போல இருக்கும்
அதன் நாளமும் தெரிகிறது
என் கரங்கள்
அந்த பூவை நோக்கி ஏந்தியபடி
பிரார்த்திக்கின்றன
அப்பூ அக்குவியலின் சரிவிற்குள்ளோ
அல்ல அவ்வரக்கர்களின் காலடிகளிலோ
அகப்படாமல் இருக்கவேண்டுமாய்
இறைஞ்சுகின்றன
பின்பு பச்சை வேரும் தரிசனம் தருகின்றது
அரை பட்ச காலத்தில்
உடைந்து சிதறிய மணற் குவியலுக்குள்
அந்த அரக்கர்கள் ஜீவ சமாதியாகிவிட்டார்கள்
காற்றும் அதன் சுழற்சியும்
அடங்கியிருந்தது
கடந்து பறந்த கூகைகளையோ காணவில்லை
அதன் இருப்பிடம் பெயர்ந்த பூவோ
தலைக்கீழாக மடுவை நோக்கி
விழவேண்டுமாய் விரைந்துகொண்டிருந்தது
அது நிலம் சேரும் கால அளவையும்
அது வரும் வேகத்தையும்
என் இருப்பிடத்திற்கும்
அந்த மணற் குவியலின் தொடக்கத்திற்கும்
இடையே இருக்கும் தூரத்தையும்
அளந்து புரவியை செலுத்தினேன்
""Yes The Moment - Force x Distance""
நிலத்தை அருகிக்கொண்டிருக்கும்
அப்பெயர்த் தெரியாத பூவின் வாசம்
புதிதாக இருந்தது
இதுகாறும் எங்கும் நுகராத மணம்
வேர் நுனியில் இருந்து இதழ் உச்சம்வரை
அதன் உயரம்
நான்கு ஆறடி ஆள்
உயரத்திற்கு இருக்கும்
காம்பின் பருமன்
நாற்பத்தெட்டங்குலங்கள் இருக்கலாம்
அதன் இதழ்களின் சுற்றளவு
முன்னூறு அங்குலங்களாக தோராயக் கணக்கு
ஏவுகணையின் வேகத்தில்
சீறிக்கொண்டிருக்கும் பெரும்பூவை
ஒற்றை ஆளாகவோ
புரவியின் துணைக்கொண்டோ
பிடித்துவிட ஒல்லாது ,,,
ஆதலால்
சக்திவாய்ந்த
கூர்முனையில்லாத
தட்டை வடிவ கண்று கொண்டு
வில்லில் பூட்டி
பூவின் திசைநோக்கி எய்யலானேன்
நினைத்ததைப்போலவே
கண்று பூவின் தலைப்பில் பட்டு
திசை சுழன்றது
வேர் கீழாக இதழ்கள் மேலாக
அப்பூவானது ,, பூமியை நெருங்க
ஒரு நாழிகைக்குக் குறைவான
சமயமே இருக்கிறது,,
அந்த வேரின் கூர் நிலத்தைக் கிழித்து
நிற்கும் போது
பூமியில் கோடு விழுந்து
அதனுள்ளிலிருந்து புதிய நகரம் முளைத்தது
ஆகாயத்தில்
வாண வேடிக்கைகள் முழங்கின
அந்த பூ விதைந்த இடத்தைச் சுற்றியும்
பெரிய அரண் ஒன்று எழும்பியது
அந்த அரணின் தலை வாசலின்
வாயிலைக் கடந்துபோகும்
எல்லோரும்
அப்பூவை இரசித்துக் கொண்டிருக்கும்
என்னிடத்தில்
அந்த பூ வீற்றிருக்கும் இடத்தில்
அழகிய பெண்ணொருவள் இருப்பதாகவும்
அவளைச்சுற்றி
கொடிய விஷம் கக்கும்
கால சர்ப்பம் ஒன்று இருப்பதாகவும்
தாழம்பூவின் மணமும் அரளிப்பூவின் மணமும்
ஒன்றிணைந்து நறும்புவதாகவும்
ஆரூடம் சொல்லிப் போனார்கள்
அவற்றையெல்லாம் தாண்டி
அதே முரசொலியும் அதே கூக்குரலும்
என் செவிகளை ஆக்கிரமித்தன
நினைவிலிருந்து விழித்தபோது
என்னங்க என்னங்க என்று
என் வீட்டு முற்றத்து கசியரையில்
பூக்களை ரசித்தபடியே உறங்கிவிட்ட என்னை
என்னை நேசிப்பதாக
சொல்லித் திரிபவள்களில் ஒருத்தி
தட்டி எழுப்புகிறாள்
அப்பெயர்த் தெரியாத
பூவின் தேஜசை
அவள் முகத்தில் காண்கிறேன்
உறங்கிக் கொண்டிருக்கும்
குழந்தையின் பிழைகளை
உறக்கமிழந்து நினைத்து இரசிப்பதைப்போல
அவள் சிரிப்பதை
இரசித்துக் கொண்டிருந்தேன்
அவள் நல்லவளாக இருக்கலாம்
ஆனாலும் எனக்குள் இருக்கும்
என் க்ரூரம் சற்று
புறமெட்டிப்பார்க்கும் இரண்டாம் தடவை அது
"பூக்காரன் கவிதைகள்"