சூரியத்தோழி
![](https://eluthu.com/images/loading.gif)
பிசுக்கேறிய கேசத்துடன்
தன்னையே நொந்தபடி
தனியே பேசித்திரியும்அந்த நடுத்தரவயதுப்பெண்
தன் தீராத சோகத்தின்
கதவுகளை திறந்துவிடும்படியும் ஏதோரு பெயரை உச்சரித்தபடியும்
காற்றின்வெளியை தட்டிக்கொண்டிருக்கிறாள்.
அழாத அழுகைகள் கிடக்கும் உண்டியலென அவள் விழிகள் உருண்டு கொண்டேயிருக்கிறது
நண்பகலில்
அனுமதியில்லாமல்
தன் அழுக்குமூட்டைக்குள் நுழைந்த சூரியன் மீது நிழலை அள்ளி வீசி எறிந்து கடுஞ்சினம் கொண்டவள்
ஆற்றாமையின் வலிகளோடு
வாழ்வை இந்தத்தெருக்களில்
நடந்தே கடத்துகிறாள்
பின் வாஞ்சையோடு சூரியனைக்கூட்டிக்கொண்டு
மேற்கு நோக்கி நடக்கத்துவங்கியிருந்தாள்.
- நிலாகண்ணன்