ஒரு முறையாவது கேட்டுப் பார்க்கலாம்
ஒரு முறையாவது கேட்டுப் பார்க்கலாம்
*************************************************************
வறட்டுப்பிடிவாதம்தான்
அவனுக்கு சிறை
வயதுக்கு வந்ததே
அவளுக்கு கொடும் சிறை,,
வரதட்சணை அட்டவணையில்
மிகக் குறைவாக
கணக்கிட்டிருப்பவை
அவள் படிப்பும்
அவள் பிறந்தவீட்டின் மதிப்பும்,,,
புருஷன் வாங்கிவார
மல்லிகைப்பூவோட வாசனை
வெளிய போகாமே
படுக்கை அறையோடு
இருக்கிரவரைக்குந்தான்
அவ பத்தினி,,,
இல்லன்னா செத்த நீ ம்ம் ,,,
வளர்த்திருக்கிற தாடிக் குள்ளயும்
முறுக்கிருக்கிற மீசைக்குள்ளயும்
முடிஞ்சுருக்கிற அவன் காதல் புனிதம்
தண்ணியடிச்சுக்கலாம்
போட்டோவ பர்சுல வச்சிக்கலாம் ,,,
மனசுக்குள்ள பூத்து
மனசுக்குள்ளயே கருகி
மறக்க நினைச்சத
வெளிய சொன்னா அவ வேசி,,,,
அவனைத்தவிர அத்தனைப் பேரும்
அண்ணன் தம்பியாதான்
அவ பார்க்கணும்
அவளைத் தவிர அத்தனைப் பேரும்
ஆசை நாயகியாத்தான்
அவனுக்கு வேணும்,,,
மொத பொண்டாட்டி செத்தா
போட்டோவ போட்டு
மாலை போட்டு சாமி கும்பிட்டு
ரெண்டாங் கல்யாணம் பண்ணிக்கலாம்
சுய சரிதை சொல்லிக்கலாம்
அதே அவ செஞ்சா
அவ நல்ல குடும்பத்துல பிறக்காதவ ம்ம்,,,
அவன் செய்யுற
எல்லா தப்புக்குமே
கடைசியா
ஒரு வார்த்தை வச்சிருப்பான்
மன்னிச்சிடுன்னு
அவ மன்னிக்கணும் ஏத்துக்கணும்
அதே அவன்கிட்ட இருந்து
அவளுக்குக்
கிடைக்கிற மன்னிப்பு
தினம் தினம்
நெருப்புல வெந்து
வெளிய வாறதுமாதிரித்தான்
இருக்கும்
இப்போல்லாம் அவள்
அவளை இப்படித்தா எரிச்சிக்கிறா
கிருஷ்ணாயிலோட
செலவுதான் மிச்சம்
வேகுறது என்னமோ வெந்துக்கிட்டுதான் ம்ம்
அவகிட்ட உக்காந்து
ஒரு முறையாவது கேட்டுப் பார்க்கலாம்
எனக்கு நீ
நின்னா குத்தம்
உக்காந்தாலும் குத்தம்
இத்தனைக் காலமா
மாட்ட அடிக்கிறமாதிரி
உன் மனசை அறையுற
என் வார்த்தைகள சுமந்துட்டும்
கடமைகள சுமந்துகிட்டும்
போடுற சாப்பாட்ட
சாப்பிட்டுகிட்டும்
என் எல்லாத் தவறுகளையுமே
பொறுமையா சகிச்சிக்கிட்டும்
என் மனசு நோகாமே
என்னை மன்னிச்சு என்கூட
வாழுற இந்த உன்னோட நல்ல குணம்
எனக்கும் எப்போ வரும் ன்னு
அவகிட்ட உக்காந்து
ஒரு முறையாவது கேட்டுப் பார்க்கலாம்
அப்போதும்
அவள் சிரித்துக்கொண்டேதான்
சொல்லுவாள்
"உன்னைப் பிரிந்து போகும்
திடமுள்ளவளாக இருந்திருந்தால்
இதோ உன் சாயலிலுள்ள
இப்பூக்களை பிரசவித்திருக்கமாட்டேன் என்று"
"பூக்காரன் கவிதைகள்"