மீனவர் வாழ்க்கை கண்ணீரே
பலவேளைகளில்
மீனுக்காக வலைவீசிவிட்டு
கரைதிரும்பும்போது
பிடித்து வந்துவிடுகிறான் ஏமாற்றங்களை.
வலையைப்போலவே
ஓட்டையாகவே இருக்கிறது
இவனுடைய வாழ்க்கை.
மீனுக்காய் வலைவீசிக்
காத்திருக்கும் சமயங்களில்
கண்டுகொள்கிறான்
திசைமாறிப்போகும்
அறிவாளி மீன்களை.
எப்போதாவது மாட்டிக்கொள்ளும்
பெரிய மீன்கள் ஆடையாய்
அணிந்துகொண்டு போய்விடுகின்றன
வலைதனை.
உடனே உயிரைவிடாத மீன்கள்
உயிர்விடுவத்ற்குள் சிலவேளை
உயிரே போய்விடும்.
இரவுகளில் குழந்தைக் குட்டிகளுடன்
உறங்குவதைப் பற்றிக்
பகலில் கனவு காண்கிறான்
தண்ணீரில் தள்ளாடும்
படகுகளைப்போல நிம்மதியற்றதும்
எப்போதும் சிக்கிக் கொள்கிற
வலையைப்போல
சிக்கலுற்றதுமான மீனவர் வாழ்வில்
மழைபெய்தால் ஊரெல்லாம் தண்ணீர்
இவர்களுக்கு மட்டும் அதிலே கண்ணீர் .
*மெய்யன் நடராஜ்