எப்போதும் எனை பிரிந்துசெல்லாதே

எப்போதும் எனை பிரிந்துசெல்லாதே
*******************************************************

நீ காதல் சொன்னபோது
அலாதியாயிருந்தது
அக்கம் பக்கத்தார்கள்
உன்னை அறியாமல் கூட
பார்த்திடக் கூடாது என்றது சுயநலம்

சும்மாதான் சொல்லிக்கொண்டிருப்பேன்
காதல் நுழை மனது
காற்று நிரப்பிய ரப்பர் பலூனைப்போல
போகும் திசையறியாது
மேலே மேலே பறந்து போவதைப்போல
இலேசாகி இருக்குமென

ஆளுமை செய்யத்தெரியாத
சிறுவன் கையில் சிக்கிவிட்டு
அல்லோலப்படும் நெகிழி பந்துபோல
சொல் பேச்சு கேட்கிறேன்

உன் ஒவ்வொரு பிறந்த நாளிலும்
உனக்கொரு வயது கூடுகிறது
அழகாகிறாய்
உன்னைப் பார்க்கையில்
எனக்கு மட்டுந்தானா
இப்படி தோன்றுகிறது ம்ம்
இதோ கடைசியாய் முடிந்த
உன் பிறந்தநாளிலும் கூட
ஒரு வயதுக் கூடியிருந்தாய்
அழகாகியிருந்தாய்
அடுத்த வருடமும்
உன் பிறந்தநாள் வரும்
ஒரு வயது கூடும்
அப்போதும்
இதுப்போலவே அழகாகியிருப்பாய்தானே

எனைக் கெஞ்ச வைக்காதே
அப்போதும் சரி இப்போதும் சரி
இனி எப்போதும் சரி
என்மேல் மட்டுமே
காதல் கொண்டிரு ப்ளீஸ்

காதுநரை எட்டிப்பார்க்கிறது
காலம் இத்தனைக் கடந்தும்
நீ எத்தனைக்கேட்டும்
ஒருமுறைப்போலும்
உன்னோடு ஒருசேர்ந்திருந்து
ஒரு புகைப்படம் பிடிக்காமல் மறுக்கிறேன்
காரணம் எத்தனை கேட்டும்
சோப்பு அத்தனை போட்டும்
உன் இத்தனை நிறம்போலும்
நான் இல்லாதுதான் தவிக்கிறேன்
நம் அறுபதாம் கல்யாணம்
வரையிலாவது பொறுத்திரேன்
உன் முடிக்கற்றையில்
ஒற்றை இழை நரைத்தாலாவது
அப்போது கேட்கிறேன்
நீ எந்தன் தோள்சாய
ஒரு புகைப்படம்
எடுத்துக் கொள்ளலாமா என்று

எப்போதும் எனை பிரிந்துசெல்லாதே
உனைக் குறித்த
என் டைரியின் கவிதைகளுக்கு
இளமை இருக்கிறது
அவற்றின் தனிமைப் பிடிக்காமல்தான்
பக்கங்கள் குறையாமல்
மயில்பீலி பற்றினேன்

கண்களை மூடி
கனவு கண்ணாடி பார்க்கிறேன்
சேலை மாற்றியபடியே
ஒவ்வொரு இறகாய்
கொஞ்சிக் கொஞ்சி
பெயர்வைத்துக் கொண்டிருந்தாய்
என் காதுகளில்
முளைத்த இமைகள்
இப்போது மெல்லத்திறக்கின்றன

"பூக்காரன் கவிதைகள்"

எழுதியவர் : அனுசரன் (25-May-16, 3:08 am)
பார்வை : 172

மேலே