அன்பே நீ வந்தபோது -19-எப்போதும் உன் நினைவு

நிலாவாய் சிரிக்கும்
ஒரு வெள்ளிக்கிண்ணமாய்
என் கைகளில்
வீற்றிரு!

முத்தம் கொடுக்கும்
மோக நிலவின்
முழு முகவரி
உன் கண்கள்!

பள்ளி அறையில்
துள்ளி வந்த
என் பாதரசமே
நீ என்
இன்பக் குறியீடாய்
இருந்துவிடு!

உன் பார்வை
பதியும் போதெல்லாம்
என் பருவம்
பதியம் போடுகிறது!

விண்ணிலும் மண்ணிலும்
விரிக்கப்பட்ட காமவலை
உன் கண்கள்!

உன் பார்வையில்
சிக்கிகொண்ட என்னை
எப்படி மீட்கப்போகிறாய்
நீ எப்படி அசைந்தாலும்
எனக்கு வலிக்கிறது!

என் நெய்யாற்றில்
நீ நெருப்பாய்
நீந்தி சென்றாயே
இதற்குப் பெயர்தான்
காதலா!
இப்படித்தான்
நான் எரிந்து
சாகவேண்டுமா!

என் கருவிழியில்
பூத்திருக்கும்
உன் உருவம்
என் இமைகளுக்குத்
தேனடி!

அந்த
மழைப் பூக்களை
கைகளில் ஏந்தியபடி
வேகமாய் ஓடுவேன்
இன்ப வெள்ளத்தில்
வீழ!

தேவியே,
உன் வசந்தத்தின்
வாசலை வந்தடைய
நான் வாழ்வெடுத்துள்ளேன்
பொன்னகையாய் மின்னும்
பூக்களை அள்ளி
தேவதைகள் சிரித்துக்கொண்டு
வீசுவதுபோல் வா!

என் இதயத்தை
காணிக்கையாய்
எடுத்துக் கொள்
உன் பேச்சைமட்டும்
பிரசாதாமாய்
திருப்பிக் கொடு!

கற்பனையின்
இன்ப யுகத்தில்
நாம் சஞ்சரிக்கும் பொது
விதியின் கைகள்
நம்மை வந்து
எழுப்ப முடியுமா!

வெந்து-ஆறிப்போன
கரியை மீண்டும்
எரிக்க விடு
உன் ஸ்பரிசம்
அவற்றை
எரியத் தூண்டும்
நெருப்பு!

என் கைகளை
எப்படி சிறகுகளாய்
அசைப்பது
ஒரு அமுதக் கடல்
செய்து கொடு
விழுந்து பார்க்கிறேன்!

மண்ணில் சுகமில்லை
மாளிகை சுகமில்லை
என்னில் சுகமாய்
இருப்பது என்னென்றால்
எப்போதும் உன் நினைவு!

எழுதியவர் : ஜெயபாலன் (1-Jun-16, 10:58 am)
பார்வை : 190

மேலே