இசை வேந்தே
பல இராப்பொழுதின்
தனிமைகளை
அர்த்தப்படுத்தியது
உன்னிசைதான்!
கசிந்துருகும்
விழிகள்தமை
துடைத்தததும்
உன் விரல்தான்!
திசைத்தெரியா
உச்சத்தில் நிலையிறுத்தி
திக்குமுக்காட்டியதும்
நின் கரம்தான்!
காதல்,காமம்,சோகமென
நீ மீட்டாத சுரமில்லை
தமிழினிலே...
பட்டித் தொட்டியென
நின் பாட்டு
நுழையாத இடமில்லை
அவனியிலே!
ஏழு ஸ்வரங்களுக்குள்
எத்தனை ஜாலம்
நீ புரிந்தாய்!
எட்டாம் அதிசயம் நீ!
பத்து விரல்தனில்
எத்தனை எத்தனை
உணர்வலைகள்
பதியமிட்டாய்!
அமுதசுரபி நீ!
வீணையேந்திய
கலைமகளீன்ற
தலைமகன் நீ!
ஜாக்ஸனும்,நோபியும்
மேற்கத்தி இசை மீட்டி
மேலெழுந்த நாளதில்
உன் கரம்பட்ட
வயலினும்
வீணையானது!
டிரம்ஸும் தவிலானது!
தமிழ்த்திரை உலகில்
தனியொரு வரலாறு
உன்னிருந்து
உதயமானது!
உணர்வெனும்
மாயக்கயிறு ஜீவன்
ஆட்டுவிக்கும்
காலம்வரையில்...
உலகின் கக்கடைசி
பொழுதது புலர்ந்திடும்
நாள்வரையில்...
நின்னிசையும்
இன்னிசையாய்
ஒலித்த வண்ணமிருக்கும்
தமிழ் புகழ்பாடி!!
உலகந் தழுவிய
உன்னத தமிழின்
உச்சமிரண்டுதான்!
ஒன்று திருக்குறள்
மற்றொன்று
மெல்லிசை அல்லது
இளையராசா!
தமிழெனும் இசையூற்று
உலகை ஆண்டிடும்
நாள்வரையில்...
திரையிசையெனும்
அருமருந்து
இதயம் பீடிக்கும்
நாள்வரையில்...
ரசனையென்ற
உணர்வொன்று
ஆட்டுவிக்கும்
பகல் வரையில்...
மனத்தோடு
மண் மணம் தங்கிடும்
நொடிவரையில்
ஆயிரமல்ல படங்கள்...
அகவை ஆயிரம் கண்டு...
என்றும் எம்மனதின்
இளமை அத்தியாயத்தில்
சக்ரவர்த்தியாய்
வாழ்ந்திடுவாய்...
ஆண்டிடுவாய்...
இசை வேந்தனே!!!
***********************