முரண்
ஏதோ எழுதி எழுதி கிழித்து
மடித்து முடிக்கும்
கணங்கள் கனக்கிறது .
முன்னுக்கு பின் முரனான
சிந்தனைச் சிதறல்கள் ....
உற்று பார்த்த மாமரம் கூட
இன்று புது பதிவை தந்தது
கிளிகளின்
கூத்தும் .....குமாளமும்
முகாரிக்கு முந்திய மகிழ்வாகவே
முகாந்தரம் தருகிறது
குயில்களின் பாடலில்
இனிமைதான்
ஆனாலும் தெரிவது
ஒரு துரோகம் ...
காக்கை கூட்டில் அவைகளின்
கள்ளத்தனம்....
அசாத்திய துணிச்சல் அந்த அணிலுக்கு...
கிழை நுனி வரை வந்து
உண்ணும் மாம்பழங்கள் ...!
அணிலுக்கு குறிவைக்கும் மதில் மேல்
பூனை....
ஒரு மரத்துக்குள்
இத்தனை வாழ்வியலா ?
மாமரத்தில் ஊஞ்சல் கட் டியாடிய
பிராயத்தில் கிளிகளின் கொஞ்சலும் ....
குயில்களின் கீதமும் ....
அணில்களில் அழகியலும்
பூனையில் மென்மையும்
மட்டுமே புரிந்ததது .......
இப்போதேல்லாம்
வாழ்கையின் வனப்புக்களை
நுகர மறுக்கிறது மனம்
வனப்புகளின் பின்னான கசப்புக்களே
கண் புலத்துக்குள் அதிகமாய்
ஆதிக்கம் .....
காரணம் கடந்து வந்த காலங்களின்
கடின முகங்களா ?
புரியாமலே முரணாகவே
முடிகிறது இந்த இரவும் வரிகளும் ........