பாட்டெழுதி போயிடுவீர்
பேதமை கொண்டவன் ஆண்டவனோவென
பேசவே வைக்கிறான் எங்களையே
மேதமை மிகவும் கொண்டவனேன்
வீதியில் எங்களைத் தள்ளிவிட்டான்?
தன்னிடம் இருந்த சொத்துக்களை
பகிர்ந்து ஏனோ கொடுக்கல?
வீதியில் கிடக்கும் எங்களுக்கேன்
நாதியாய் அ(எ)வனும் இருக்கல?
வெயிலும் புரட்டி எடுக்குதே
மழையும் ஓட விரட்டுதே
உதவிசெய்யா மனிதன் பார்வை
அற்பமாய் எங்களை பார்க்கிறதே..
பசியால் வயிறு துடிக்குதே
மானம் உடுப்பின்றி போகுதே
என்ன பாவம் செய்துவிட்டோம்
நடுவீதியில் கையேந்தி நிற்கவைத்தான்
நாளை எப்படி விடியுமோ!
உமக்குத் தெரிந்தால் சொல்லிடுவீர்
நடுவீதிதான் தொடர்கதை ஆகுமென்றால்
உம்பாட்டுக்கு பாட்டெழுதி போயிடுவீர்..