தூரிகை

ஓவியக் குமிழ்கள் ஒளிர்வதர்கான
சிந்தனை மின்சாரத்தைக்
வண்ணங்களாய்க் கடத்தும் கம்பிகள்

கோடைக்காலத்தில் மழையையும்
மழைக்காலத்தில் கோடையையும்
வீட்டுக்குள் கொண்டுவந்துவிடுகின்றன

தீந்தை குளத்தில் நீராடி
காகிதங்களில் தலைதுவட்டிவிட்டு
சோறுபோடுகின்றன தூரிகைகள்
ஓவியனின் வயிற்றுப்பசிக்கு.

தூரிகைகள் வண்ணம் குளிக்கா காலங்களில்
வானவில் தற்கொலை செய்துகொள்கிறது
ஓவியனின் வறிய வானத்தில்

ஓவியங்களை வாழவைத்துவிட்டு
வாழ்க்கையை கொன்றுவிடும்
சில தூரிகைகள் மீனுக்கு தலையையும்
பாம்புக்கு வாலையும் காட்டும்
விலாங்கு மீன்

ஓவியனின் தீராத பசியை
வரைந்துவிட்டு இளைப்பாறும்
தூரிகைகளில் எப்போதும்
வழிந்துகொண்டிருக்கும் இன்னும்
வரையப்படாத ஓவியத்தின் ஏக்கம்

சுவரில்லாமல் ,
வர்ணங்களில்லாமல் அழகியக் காதலை
கண்களால் வரைகின்றக்
காரிகையர் முன்னால் தங்களின்
கர்வத்தை தொலைத்துவிடுகின்றன தூரிகைகள் .

புகழ்மிக்க ஓவியங்களில்
வாழுகின்ற ஓவியர்களுக்குப் பின்னால்
மரணித்திருக்கின்றன எல்லாத் தூரிகைகளும்

ஏற்றிவிட்டு ஏறமுடியாத
ஏணிகளும் ,ஆற்றைக்
கடக்கவைத்து கரைசேரா
தோணிகளும் மட்டுமல்ல தூரிகைகளும்தான்
கிடக்கின்றன கவனிப்பாரற்று .


இங்கே யார் வரையக்கூடும்
தூரிகையின் கண்ணீரை.?

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (9-Jun-16, 4:17 am)
Tanglish : thoorikai
பார்வை : 566

மேலே