ஒரு நிமிடக்கதை - ஸ்பரிசம் ,,,
ஸ்பரிசம் ,,,,,,
= தமிழில் தொடுதல், அரவணைப்பு, கட்டிப்பிடித்தல், முத்தமிடுதல்,,, இன்னும் ,,,
,
இதில்தான் இருக்கிறது அனைத்தும் . நான் பல வருடங்களாக வாடகைக்கு பல்லடத்தில் குடியிருந்தேன். அங்கிருந்து எனது சொந்த வீட்டிற்கு வந்து ஒரு வருடமாகிறது ! கடந்த வாரம்,,, நான் குடியிருந்த வீட்டிற்கு சென்று இருந்தேன். அங்கு பக்கத்துக்கு வீட்டில் குடியிருக்கும் தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை. நான் வீடு மாறும் பொழுது அவளுக்கு வயது மூன்றுதான். பெரும்பாலும் நான் வீட்டிற்கு வந்ததும் என்னுடனே ஓடி வரும் ! பெரும்பாலும் என்னுடன்தான் இருக்கும். என் மடியில் அமர்ந்து டி.வி. பார்ப்பதும், விளையாடுவதும் ஒரே அமர்க்களமாய்தான் இருக்கும் !
எங்களின் உறவு அவ்வளவு அற்பதமாய் இருந்தது. பல சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அதிகம் செல்ல முடியவில்லை. போகும்போதெல்லாம் தூங்கிக்கொண்டிருப்பாள். நானும் எழுப்ப வேண்டாம் என்று அவர்களுடன் பேசிவிட்டு வந்து விடுவேன். சரி இன்று நேரமே சென்றபொழுது, விளையாடிக்கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் ஒன்றும் பேசாமல் விளையாட்டை நிறுத்தி விட்டு, என்னைப் பார்த்துக்கொண்டே ஒன்றும் பேசாமல் இருக்கவே, நானும் மூன்றாம் பிறை கமலஹாசனைப்போல் என்னை தெரியப்படுத்த பகீரதப்பட்டுக்கொண்டிருந்தேன்.
இதில் வேறு என்னை நினைவுபடுத்த அனைவரும் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கையில்,,, சற்றே யோசித்தவாறு என் அருகில் வந்தவளை, பிடித்து மடியில் வைத்துகொண்டவுடன் என் வாசனையை, என் உடல் சூட்டை உணர்ந்தவுடன் , என்னைப் பார்த்து சிரித்து, மாமா எதுல வந்த கார்லய ? ஸ்கூட்டர்லய என்று கேட்டுவிட்டு, பழையபடி என்னுடன் பேச ஆரம்பித்து விட்டாள். பிறகு கிளம்பி வரும் வரையில் ஒரே ரணகளம்தான் !
வீடு வந்த பிறகுதான் புரிகிறது ஸ்பரிசம் என்பதின் பலம் . இது புரியாமல் நாம் நம் வாழ்வியலை அதிகம் கடந்து வந்திருக்கிறோம் என்பது. தெரிந்தோ தெரியாமலோ நம் உடல் ஸ்பரிசத்திற்கு ஏங்குகிறது. அது தாய்மையோ, கணவன் மனைவி உறவோ, சகோதரத்துவுமோ, நட்போ, இந்த உறவுகளுக்கு இது தேவையாய் இருக்கிறது.
இதை புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறும்போது ,,,,,,,,,,,,,,,,,,,,,,,
அனைத்துமே தடுமாறுகிறது ! தள்ளாடுகிறது ! தத்தளிக்கிறது !!!!!