கல்வியெனும் வியாபாரத்தில் பலியாகும் பைத்தியக்காரர்கள்

90 களில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களுக்குத் தெரியும் 400 மதிப்பெண்களையோ 1100 மதிப்பெண்களையோத் தாண்டுவது எத்தனை கடினமென்று!

இன்று சர்வ சாதாரணமாக 480 மதிப்பெண்களும், 1150 மதிப்பெண்களும் எடுக்கும் மாணவர்கள் நன்றாகப் படிக்கிறார்கள் என்று மட்டும் எண்ணி விடாதீர்கள்!!
இங்கு மிகப்பெரிய கல்வி விற்பனைச் சந்தை நடைபெறுகிறது. அச்சந்தையில் லாப நோக்கிலான பொருட்கள் மட்டுமே விற்பனை!
இங்கே பெற்றோருக்கும் பணம் காய்ப்பதற்கு ஒரு மெஷினும், மார்க் வாங்குவதற்கு ஒரு மெஷினும் தேவைப்படுகிறது!!

ஆம் அந்நாட்களில் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகள் அரசின் வசமே இருந்தன. 80 சதவிகிதத்திற்கும் மேல் மதிப்பெண் பெறும் மாணவர்கள் அங்கு சேர்த்துக் கொள்ளப் பட்டனர்! 95 சதவிகிதத்திற்கும் மேல் எடுத்த சொற்ப மாணவர்கள் மருத்துவப் படிப்பைத் தேர்ந்தெடுத்தனர்!!

இன்று ஆண்டிற்கு அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் தேவைக்குப் போக பொறியியல் கல்லூரிகளுக்கு மட்டும் சுமார் 200,000 (இரண்டு இலட்சம்!) மாணவர்கள் தேவைப்படுகிறார்கள்! "அவரவர்களின் கல்லூரிகளுக்குத் தேவையான மதிப்பெண் பெற்ற மாணவர்களை அவர்களே உருவாக்குகிறார்கள்"! என்பதே நிதர்சனமான உண்மை.
ஆண்டிற்கு இத்தனை காலியிடங்கள் இருக்கும் இந்தக் கல்லூரிகளுக்கு "நன்கு படிக்கும் மாணவர்கள் கிடைப்பது அரிது!" ஆனால் "நிறைய மதிப்பெண் எடுத்த மாணவர்கள் கிடைப்பது மிகச் சுலபம்!"
எப்படி என்று கேட்கிறீர்களா??!!

மதிப்பெண்களை வாரி வழங்குவதும் அவர்கள்தான்!
அதிக மதிப்பெண்களைக் கொடுத்து "கன்றுக் குட்டி பொம்மையைக் காட்டி பசுவிடம் பால் கறப்பது போல" தங்கள் கல்லூரிகளை நோக்கி இழுப்பதும் அவர்கள்தான்! 300 மதிப்பெண் பெறவேண்டிய ஒரு சராசரி மாணவன் அந்த மதிப்பெண்ணைப் பெற்றால் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்குத்தான் முயற்ச்சிப்பான்! ஆனால் இங்கே ஏக்கர் கணக்கான நிலங்களை வளைத்துப் போட்டு, கோடிக்கணக்கான பணத்தை வாரியிரைத்து கட்டி ஆண்டிற்கு 2,00,000 இலட்சம் இடங்களை ஏற்படுத்தியிருக்கும் கல்லூரிகள் என்ன செய்வது??!! அதற்காகத்தான் இந்த மதிப்பெண் மழை! பெற்றோர்களும் மெத்த மகிழ்ந்துதான் போவார்கள், தங்கள் செல்வங்களின் மதிப்பெண்கள் பார்த்து! அது தூண்டில் முள்ளில் மாட்டப்படும் புழுவெனத் தெரியாமல் "இவ்வளவு மார்க் எடுத்த எம்புள்ளைய என் சொத்தை விற்றாவது என்ஜினியர் ஆக்குவேன்!" எனக் கங்கணம் கட்டிக்கொண்டு புறப்பட்டு விடுவார்கள்!

"இன்று பெரும்பாலும் பொறியியல் கல்லூரிகளைத் தங்கள் கைவசம் வைத்திருக்கும் கல்வித் தந்தைகள் யார் என்று நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை..!!"

ஆண்டிற்கு இரண்டு இலட்சம் இளைஞர்களுக்கு "வேலைவாய்ப்பை!" எங்களால் தர இயலாது! ஆனால் உங்கள் பணத்தைப் பறித்துக் கொண்டு பைத்தியக் காரர்களை எங்களால் உருவாக்க முடியும்!!
கல்வி வியாபாரப் பொருளாகிப் போன எங்கள் தேசத்தில்,
அதன் தரம் மட்டும் "ஆண்டுக்கு ஆண்டு!" அதிகரித்துக் கொண்டே போகிறது....

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (9-Jun-16, 7:23 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 289

மேலே