என் பார்வையில் - படிப்பு என்பது
படித்தலில் கிடைக்கும் அறிவு சாதுர்யம் மிக்கது. படித்தலில் வரும் தெளிவு வாழ்வை மிளிரவைக்கத் தக்கது. படிப்பவரால் தான் மனதுள் ஊக்கத்தை விதைத்துக் கொள்ளமுடிகிறது. நிறையப் புரிந்து ஆழ்ந்து சிந்தித்து சட்டென தெளிய படிப்போரால் முடிகிறது.
விதைத்தால் விளையும் நிலம்போல படிப்பினால் உதிக்கும் ஞானம் வெளியெங்கும் நன்மையின் வெளிச்சத்தைப் பரவச்செய்யும். மகிழ்ச்சியை எதுவென்று அறியக்கூடிய அறிவுக்கூர்மையை படிப்பு மேம்படுத்தும்.
ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக சிந்தித்து நாம் தாள்களை புத்தகங்களை கண்டறியும்முன்னரே ஓலையில் எழுதத் துவங்கியது நமது முன்னோர்கள்.
புத்தகங்கள் ஒவ்வொன்றும்
ஆயிரமாயிரம் சிந்தனையின் விதைகளைத் தாங்கிக் கொண்டுள்ளதை படிக்கப் படிக்கவே உணரமுடியும்.
புத்தகங்களை அடுக்கிவைத்துக் கொண்டு அதைப் பிரிக்காமலே கடந்துச்சென்றுவிடும் நாம் நம் நிகழ்கால நன்மையினை தொலைப்பதோடு மட்டுமில்லாது எதிர்காலப் வாழ்வியலையும் மாற்றியமைக்கிறோம் என்பதையும் கவனிக்கவேண்டிய கட்டாயமுள்ளது.
நூலகத்திலிருந்து உருவான நிறைய மேதைகள் நம் நாட்டிலுண்டு, வெளிநாடுகளிலும் உண்டு.
இவ்வுலகம் ஒரு புள்ளியில் அடங்கத்தக்கது எனும் நம்பிக்கை நமக்கெல்லாம் எவ்வளவு வலிமையானதாக உள்ளதோ, அதேயளவு இந்த ஒரு பிறப்பின் அறிவினுள்ளோ அல்லது ஒரு பிறவியின் காட்சிக்குள்ளோ அடங்கிப்போவதும் கூட இல்லை இந்த உலகு.
நூலகங்களைப் பயன்படுத்தப் பழக வேண்டும்.
புத்தகம் என்பது நாளைய தலைமுறையின் இன்றைய முன்னுதாரண பிறப்புகளாகவே நாம் வாழயிருக்கிறோம் என்பதை அறிவுணர வேண்டும்.
எதையும் கற்று அலசி ஆய்ந்து உலகின் நன்மைக்கென ஆலோசித்து சிறந்ததை ஏற்று வருத்தத்தையும் இன்னலையும் தீர்க்கத் தக ஆற்றலை, ‘படிப்பதன்மூலமும் வளர்த்துக்கொள்ளமுடிவதை’ நடைமுறை அறிவோடு வளர்க்கவேண்டும்.
நேற்றைய வரலாற்றைக் கண்டு இன்றைய காலத்து வாழ்க்கையை நிமிர்த்திக்கொள்ள புத்தகங்கள் உதவும்.

