கற்றறிமூடரைக் கண்டு விலகுக
பற்றொடு செற்றம் பயமின்றிப் பலபொருளும்
முற்ற உணர்ந்தான் மொழிந்தன-கற்றும்
கடையாய செய்தொழுகும் காரறிவி னாரை
அடையா ரறிவுடை யார்.
(பதவுரை) பற்றொடு செற்றம்பயமின்றி ஆசையும்பகையும் அச்சமும் இல்லாமல், பல்பொருளும்-பல பொருள்களினியல்பும், முற்ற உணர்ந்தான் மொழிந்தன-விடாது அறிந்த அருகக்கடவுள் கூறியவற்றை, கற்றும்-படித்தும், கடையாய-பழிக்கப்படுவனவற்றை, செய்தொழுகும்-செய்தொழுகின்ற, காரறிவினாரை-அறிவில்லாதவர்களை, அறிவுடையார் அடையார்-அறிவுடை யவர்களைடையார்கள்.
(குறிப்பு) முற்ற உணர்ந்தான்-முழுவது முணர்ந்த இறைவன் எனலுமாம். உணர்ந்தான், மொழிந்தன: வினையாலணையும் பெயர்கள். கருமை+ அறிவு= காரறிவு, கரிய அறிவு, அறிவின்மை (75)