கல்வி
1;கல்வி முதலியன செல்வங்கட்குக் காரணமாம்
நல்வினைப்பி னல்லால் நறுந்தா மரையாளும்
செல்லாள் சிறந்தார்பி னுயினும்-நல்வினைதான்
ஓத்தும் ஒழுக்கமும் தானமும் உள்வழி
நீத்தல் ஒருபொழுது மில்.
(பதவுரை) சிறந்தார் பின் ஆயினும்-தன்னை நேசிப்பவர்களிடத்திலாயினும், நல்வினைப் பின் அல்லால்-நல்வினை காரணமாக அதன்பின் செல்வாளே யல்லாமல், நறும் தாமரையாளும்-நல்ல தாமரை மலரில் வாசஞ்செய்கின்ற திருமகளும், செல்லாள்-செல்லாள், நல்லவினை-அந்நல்வினை, ஓத்தும் ஒழுக்கமும் தானமும் உள்வழி-கல்வி ஒழுக்கம் தானம் இம்மூன்றும் உள்ளவிடத்து, ஒருபொழுதும் நீத்தல் இல்-எக்காலத்தும் நீங்குதல் இல்லை.
(குறிப்பு) நறுந்தாமரை-அழகின் நலமிக்க செந்தாமரை, ஓத்து-ஓதப்படும் கல்வி, காரணப்பெயர். வழி ஏழனுருபு. தானம்-பிறர்க்குதவி செய்தலாகிய தருமம்.
2; . தன்னை உயர்த்துங் கருவி தானே யாவன்
தன்னிற் பிறிதில்லை தெய்வம் நெறிநிற்பில்
ஒன்றானுந் தானெறி நில்லானேல்-தன்னை
இறைவனாச் செய்வானுந் தானேதான் தன்னைச்
சிறுவனாச் செய்வானுந் தான்.
(பதவுரை) நெறி நிற்பில்-ஒருவன் நன்னெறிக்கண் நிற்பானாயின், தன்னின் தெய்வம் பிறிதில்லை-அவனின் வேறான தெய்வம் ஒன்று இல்லை, தான் ஒன்றானும் நெறிநில்லானேல்-அவன் ஒருவிதத்திலும் நன்னெறிக்கண் நில்லானாயின், அவனிற்றாழ்ந்தது வேறொன்றில்லை, தன்னை இறைவனாச் செய்வானும் தானே-தன்னை மற்றவர்களுக்குத் தலைவனாகச் செய்துகொள்பவனும் தானே, தன்னைச் சிறுவனாச் செய்வானும் தான்-தன்னை மற்றவர்கட்கும் தாழ்ந்தோனாகச் செய்துகொள்பவனும் தானே யாவன்.
(குறிப்பு) தானே-ஏ: பிரிநிலைப் பொருள். “நெறிநில்லானேல், அவனிற் றாழ்ந்தது வேறொன்றில்லை” என விரித்து முடித்தது இசையெச்சம். (77)