அந்த நொடி

பெத்தெடுத்து வளர்த்துவிட்ட பெற்றோர் மற்றும்
=பேரன்பாய் கூடிவாழ்ந்த பிரிய முள்ளோர்
அத்தனையும் விட்டுவிட்டு அன்பன் என்று
=அவனொருவன் வந்தொருநாள் அழைத்துச் செல்ல
உத்தமமாய் செல்லுகின்ற உயரியத் தருணம்
=உடலைமட்டும் எடுத்துக்கொண்டு உயிரைவைத்து
சத்தமின்றி அழுதிருக்கும் சரீரிக் குள்ளே
=சஞ்சலத்தைப் பூட்டும்பெண் சங்கடங் கொள்வாள்!

பெய்துவிட்ட மழையைப்போல பெண்ணின் வாழ்வு
=பெருமேகம் மீண்டும்வான் பக்கம் இல்லை
கொய்துவிட்ட பின்பூவும் கொடிக்கு இல்லை
=குங்குமத்தை நுதலேந்தும் கோதையர் தன்னை
செய்துவைத்த இறைவனுமே சிறந்த வீடாய்
=சென்றவனின் வீடிருக்க செய்த விதியால்
தெய்வங்களை மறந்தொருவன் திருவடி நிழலில்
=திருவிளக்காய் ஒளிர்வதற்கு திரியா கின்றாள்

இன்றுவரை இருந்திருந்த எல்லாம் மாறி
=இனிமேலே கைதிஎன்று இருப்ப தற்கு
சென்றொருவன் இதயமெனும் சிறையி னுள்ளே
=சீர்சிறப்பாய் செல்லுமிந்த செழுமை மிகுந்த
பொன்நொடிதான் வாழ்க்கையெனப் பெண்க ளுக்கு
=பூமியிலே சொல்லிவைத்தார் பெரியோர் அன்று
என்றிருந்தும் இருந்தஇட இயல்பை விட்டு
=இடம்பெயர்தல் சுலபமில்லை இதயத் திற்கு.

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (16-Jun-16, 8:14 pm)
பார்வை : 109

மேலே