ஓடி வா தளிரே

ஓடி வா தளிரே.

-கிருஷ்ணா

ஓடி வா தளிரே எந்தன் சிறு உருவே
அழுகையில் அதட்டும் கோவே
பசிப்போயின் புன்சிரிப்பில் அருளும் இறையே
நான் எழுதாத புதினமே
எடை சிறிதுமிலா பொக்கிஷமே
உன்விரல் தொடமனம் ஏங்குதே - அதன்
மென்மை கண்டு உள்ளம் பொங்குதே
அறிவெனும் அரணை நான்தர
தலை கவிழா ஜோதியாய் நீ வலம்வா
என் தோளில் உறங்கும் புதுமலரே
விரல் பிடித்து உன்பாதம் தூக்கு
நீ நடக்க.
பலம் கொடுத்து எனைநீ தாக்கு
நான் நடிக்க.
மாசிலா தூய வனமே - நான்
எழுதும் முற்றுப்பெறா கதையே
எதையும் துணிவாய் செய்யும் ராஜனே
தவறில் தன்னை திருத்தும் வீரனே
கற்க துடிக்கும் மாணவனே
எந்தன் நகல் நீ. எந்தன் நிஜம் நீ.
மெல்லும் அழகில் என் பசி தீர்த்தாய்
கொஞ்சி கொஞ்சி நீகவி படித்தாய்
உனக்கு மிகப்பிரியம் என் மார்புப்படுக்கை
தட்டுதலில் தாளம் கேட்டு என்னையும் ராஜாவாக்கினாய்
கேட்க கேட்க முத்தம் தந்து என்னாசை உடன்தீர்த்தாய்.
மார்பிலிருந்து மெத்தை மாறும்போது
அசைந்தால் நீ விழிப்பாய் என அசையாது வைக்க.
ஏனோ நீ விழித்தாய். சில நாழிகை கட்டிக்கொண்டு
என் காவலின் நம்பிக்கையில் உறங்கினாய்.
நீ ஒரு பிறப்பெடுத்து எனக்கொரு பிறப்பளித்தாய்.
உன்னுடன் வாழ எவருக்கும் வேண்டும் இன்னொரு உலகம்.

எழுதியவர் : கிருஷ்ணா (24-Jun-16, 1:07 am)
பார்வை : 486

மேலே