தூரிகை வரையாத ஓவியம்

ஓவியங்களை
வரைந்து வரைந்து
திருப்தி ஏற்படாமல்
காகிதங்களைக் கிழித்து
அறை முழுவதும் குப்பையாக்கிக்
கொண்டிருந்தான்
இறுதியில்
கண்டடைந்துவிட்டான்
காலச்சரித்திரத்தில்
அவனது பெயரை நிலையாகச்
செதுக்கி வைக்கப் போகும் ஓவியத்தை
தரையில் விரித்து வைத்து
தனது கைவண்ணத்தைப்
பார்த்து தானே பிரமித்துப் போனான்
ஓவியப் போட்டியில்
உலகின் மிகச் சிறந்த ஓவியன்-
என்ற பட்டத்தைப்
பெறுவதைப் போன்ற கற்பனையில்
கண்ணயர்ந்து உறங்கிப்போனான்
கண்விழிக்கையில்
அக்காகிதத்தைக் கிழித்து
அவனது குழந்தை
விளையாடிக் கொண்டிருந்தது
கோபத்தில் அடிக்கக் கை ஓங்கிய
அவனைப் பார்த்து
அன்பு பொங்க கபடமற்றுச் சிரித்தது
அவனுடைய தூரிகை வரையாத ஓவியம்.

எழுதியவர் : ப.மதியழகன் (23-Jun-11, 1:57 pm)
சேர்த்தது : ப.மதியழகன்
பார்வை : 383

மேலே