மாற்றம் காண்போமா நாமும்
மாற்றம் காண்போமா நாமும்
*****************************************
ஒற்றை விளக்கொளியில்
ஓலைக் குடிசையினில்
ஒடுங்கிய நிலையோடு
ஒதுங்கியே வாழ்கின்ற
ஒண்டிக் குடும்பத்தின்
ஒருகாட்சி ஏழ்மையின் !
நிலவிடும் அமைதியிங்கு
நிலைத்த சோகத்தினை
நிரம்பிவழியும் விழிகளில்
நிதர்சனமாக காட்டுகிறது
நிம்மதியை குலைக்கிறது
நிமிடநேரம் காண்பவர்க்கும் !
நிகழ்ந்திடாதா மாற்றமும்
நிலையாக இவர்களிடம்
நிகழ்வுகள்பல பூமியில்
நித்தமும் நடந்தாலும்
நிரந்தரத் தீர்வொன்றாக
நிலத்தினில் பிறக்கவில்லை !
அலங்கார வளைவுகளுடன்
அளவிலா மின்விளக்குகள்
அரசியல் கூட்டங்களில்
அதிகார வர்க்கங்களின்
அடங்கிடா ஆடம்பரங்கள்
அன்றாடம் அரங்கேற்றம் !
கையளவு சோற்றுக்கே
கையிருப்பும் அரிசியின்றி
மையிருட்டு குடிசையில்
கைம்பெண் முகம்போல
கைதியாக வாழ்கின்றனர்
கைவிட்ட நிலையில் ஏழைகள் !
மாற்றம்தான் ஏற்றமெனில்
மாற்றாத நிலைதானே
மாற்றமின்றி தொடர்கிறது
மாற்றாமல் ஏமாற்றமும்
மாறாது நிலைக்கிறது
மாற்றம் காண்போமா நாமும் !
பழனி குமார்
01.07.2016