நீயும் நானும்
(காதல் சொல்லும் படலம்)
நீயும் நானும் வயல் வெளியில்
நீரும் சேரும்
கலங்க ஆடிய
காலங்கள் உனக்கு
நினைவுள்ளதா......
வயலும் வரப்பும் மலரும் மணமும்
அதுபோல் நாமும்
சேர்ந்தே இருந்த
காலங்கள் உனக்கு
நினைவுள்ளதா......
வாய்க்கால் வழியே ஓடும் நீரில்
கால்கள் நனைத்தே
ஆடிக் களித்த
காலங்கள் உனக்கு
நினைவுள்ளதா......
சேற்று வயலில் செம்மண் அள்ளி
சிற்பங்கள் செய்தே
நாமும் மகிழ்ந்த
காலங்கள் உனக்கு
நினைவுள்ளதா......
தேக்கு இலையில் கோயில் கட்டி
கல்லில் சாமி
நாமும் வைத்த
காலங்கள் உனக்கு
நினைவுள்ளதா......
மாடுகள் கட்டும் துறை எல்லாம்
நுங்கு வண்டியுடன்
நாமும் ஓடிய
காலங்கள் உனக்கு
நினைவுள்ளதா......
ஆலையில் சிக்கிய கரும்பின் சக்கை
களமெங்கும் மணக்க
நாமும் ஆடிய
காலங்கள் உனக்கு
நினைவுள்ளதா......
சிவந்த செம்பருத்தி நானும் பறித்து
உன்கையில் சேர்த்து
நாம்வீடு சென்ற
காலங்கள் உனக்கு
நினைவுள்ளதா......
பொய்யாகவே நீ சமையல் செய்வாய்
மெய்யாகவே நான் அதையும் உண்பேன்
நம்முள்ளங்கள் நெகிழ்ந்து
இதழ்கள் மலர்ந்த
காலங்கள் உனக்கு
நினைவுள்ளதா......
ஆற்றைப் பார்க்க அடமும் பிடித்தே
நீயும் நானும் தனியே சென்று
பார்த்து வந்த
காலங்கள் உனக்கு
நினைவுள்ளதா......
மாட்டு வண்டிகள் நிற்கும் ஆலையில்
நாமும் நின்றே சில சமயம்
மழையை ரசித்து
சிறிதே நனைந்த
காலங்கள் உனக்கு
நினைவுள்ளதா......
காலமும் கல்வியும் இடையில் நம்மை
விலக்கி வைத்தே
வேடிக்கை பார்த்த
காலங்கள் உனக்கு
நினைவுள்ளதா......
உண்மையில் நானும் உன்னை மறந்திருந்தேன்
காலமும் ஓட பருவமும் மாற
உன்மேல் நான் கொண்ட
அன்பும் கனிந்தது
காதல் வளர்ந்தது......
என்விழியின் வழியில் நீயே ஒளிர்கிறாய்
என்மனதில் நிறைந்து நீயே வழிகிறாய்
வாழ்வின் துணையாய்
அன்பில் நனைய
நீ வருவாயா......
நீ......
வருவாயா......
வருவாயா......
- செ.கிரி பாரதி