துயர்கள்

புயலும் பூகம்பமும்
பிரளயமாய்
உயிர்களைக்காவு வாங்குகையில்
தீரா சோகம் தரும்
மானிடத்துயர்கள்..!

வாழ்க்கையெல்லாம்
வாஞ்சையுடன் வழிகாட்டி
வயோதிகத்தில் விடைபெறுகையில்
விம்மலும் விசும்பலும்
வாழ்வுத்துயர்கள்...!

வாழ்வின் வாசலில் வசந்தத்தை
நெருங்க முடியாமல்
எட்டி நின்று ஏக்கத்துடன்
இளமையை வீணாக்கும்
மீளாத்துயர்கள்...!

பலூன் உடைவதும்
பொம்மையின் கண்கள் தொலைவதும்..
தீராக் கண்ணீர் தரும்,
குழந்தைத்துயர்கள்..!

மனிதனை துயர்கள்
தொடர்வதும் மறைவதும்
காலத்தின் கோலம்;
அறிந்தோ அறியாமலோ
இவைகளை எதிர்கொள்வது
ஆசையாலும் அவசரத்தாலுமே..

அதற்காக ஆசையை விடமுடியுமா?
அவசரத்தை அடக்க முடியுமா?
ஆன மட்டும் வாழ்வது
அவன் இட்ட கட்டளையே..!...?

எழுதியவர் : செல்வமணி (5-Jul-16, 7:47 pm)
பார்வை : 84

மேலே