அழகிய தமிழ் மகள்

என் அனுமானம்
சரியென்றால்,
அவளை நான் கண்டது
என் கனவாக
இருக்க வேண்டும் !

அவள்
புடவைக்குள் தன்னை
புகுத்திக்கொண்டு
நிற்கவில்லை

அவள் மார்டன்
உடைகளிலும்
ஒரு நேர்த்தி
இருந்தது

அவள் கூந்தலில்
ஒரு கன்னிப்
பூவும் இல்லை

காற்றோடு ஏதோ
ரகசியம் பேசிக்
கொண்டிருந்தது
அவள் கூந்தல்

அவளுக்கு ஆங்கிலம்
மட்டுமல்ல வேறுசில
மொழிகளும்
தெரிந்திருக்க வேண்டும்
அவள் முழுக்க
முழுக்கத் தமிழில்
பேசினாள்

அவள் கண்களின்
நரம்புகளில் கூட
நிறைந்த்திருந்தது
அவள் 'பெண்'
என்பதன் கர்வம் !


உங்களில் யாரேனும்
அவளுக்கு 'மாதவி'
என்று கூட
பெயர் சூட்டலாம்
போகட்டும் பரவாயில்லை!
அனுதாபம் என்ற
பெயரில் வரும்
ஆயிரம் கோவலன்களை
அவள் எரித்துக்
கொண்டிருந்தாள்

அவள் புன்னகையில்
ஒரு புனிதம்
இருந்தது

அவள் கண்ணீரில்
சில நூறு
காவியங்களின் சோகங்கள்
கசிந்துக் கொண்டிருந்தன

அவள் அன்பில்
சில ஆன்மாக்களுக்கு
அமைதி கிடைத்தது

அவள் கோபத்தில்
சில பேய்கள்
பயந்துவிட்டன

அவள் முடிவுகளில்
நிதானம் இருந்தது
அவள் தயக்கங்களிலும்
ஒரு தெளிவு இருந்தது

அவள் வார்த்தைகள்
பல இதயக்கற்களை
உடைத்துப் போட்டன

அவள் மௌனங்கள்
இன்னும்...
என் காதுகளில்
ஒலித்துக்கொண்டிருக்கின்றன

அவள் அங்கங்கங்கெல்லாம்
அழகு கொட்டிக்
கிடந்திருக்கலாம்
அவற்றையெல்லாம்
நோட்டமிட நான்
மறந்துவிட்டேன் !

அவள் அழகை
வர்ணிக்க எனக்கு
அவை தேவைப்படவும்
இல்லை !

என் கைகூப்பி
அந்த அழகிய
தமிழ் மகளுக்கு
வணக்கம் சொன்னேன்

என் வணக்கத்தை
ஏற்றுக் கொள்வதாய்
புன்னகையோடு
கண் இமைத்தாள்!

வேறு எதுவும்
அவளை பற்றி
எனக்கு ஞாபகம்
இல்லை ...!

எழுதியவர் : அனுசுயா (5-Jul-16, 10:37 pm)
பார்வை : 152

மேலே