ஊதிவிட்டாள் சங்கு

ஏழைநீ என்கழுத்திற் கேற்றதாய் தாலிகட்ட
தாழை மரப்பாலை தோரணம் – வாழை
மரப்பந்தல் வாசலுடன் மங்கள மேள
வரவேற்பு எல்லாம் எதற்கு?

மஞ்சள் கயிற்றை மனமுவந்து கட்டிவிடு
தஞ்சம் அடைவேன். தினமுன்னைக் கொஞ்சிக்
குலவிக் குடித்தனம் கொண்டு மகிழ்ந்து
உலவுவோம் என்பாள் உவந்து.

ஓலைக் குடிசை உளம்விரும்பி கேட்டவள்
சோலை வனப்பே சுகமென்று – சேலை
துணிவாங்கி சிந்தைக் குளிர்விக்க அன்பை
அணிவிப்பாள் காதல் அணங்கு.

உன்னதக் காதல் உலகில் இதுவென்று
தன்னைக் கொடுத்துத் தவிக்கின்ற உன்னருகே
இந்தாஎன் கல்யாண பத்திரிகை என்றொன்றை
தந்தூதி வைப்பாளே சங்கு.

கல்யாணப் பத்திரிகை காதல் இறந்ததும்
சொல்லா தடக்கும் சவப்பெட்டி – அல்லவோ
என்றே தவிக்கின்றக் காலம் அவளுந்தான்
இன்னொருவன் ஊதுகின்ற சங்கு.
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (6-Jul-16, 4:18 am)
பார்வை : 202

மேலே