நானும் நீயும் பிரிந்த அந்த நாள்
விசாரிப்புகளுக்குப்பின் நீண்ட மௌனம்,
நெகிழ்ச்சியில்லாது வெற்றுப்புன்னகை.
எனக்கு அவள் எழுதியது அவளுக்கு நான் எழுதியது
மீண்டன அவளிடமும் என்னிடமும்.
நினைவுகளை சிலுவையில் அறைந்தோம்,
ஆசைகள் அப்போதே தீக்குளித்தன.
சரி கிளம்பவா என்றாள்.
எப்போது திரும்புவாய் என்றேன்.
இனி எப்போதும் இல்லை
என்னை மறந்து விட்டு உங்களுக்கென இனி நீங்கள்
வாழவேண்டும் என விருப்பம் தெரிவித்தாள்.
நீயின்றி நானில்லை இதுவே என் முடிவு.
என்றதும் என் மூச்சும் சூடாகி
கண்கள் இயலாமையில் கொப்பளித்தன.
பதிலுக்கு அவளும் கண்ணீரில் கரைத்து
விட்டாள் வார்த்தைகளை!
முதன் முதலில் பார்வைகளில் பொறுக்கி
நான் சேர்த்து மாலையாக்கிய என் காதலை
பிரித்து எரிந்துவிட்டு போய் விட்டாள்.
என் காலுக்கு கீழே என் காதலின்
மௌன அடையாளங்கள் மூர்ச்சையாகி கிடந்தன,
எனக்குள் பேச்சு இல்லை,
மூச்சு...ஹும்..