அம்மா
சொட்டு இரத்தத்தை உறிஞ்சி!
கிஞ்சித்தேனும் வலிதரும்
கொசுவினையும் கொள்வது இயல்பு!
உனது குருதியினை குடித்து!
மரணவலியை தொடுத்த எமனான...
என்னை!
அகமுகதிரண்டிலும் அளவாடங்கா...
மகிழ்வோடு அள்ளிமடியில் அனைத்து
மார்பினை தானமிட்டாயே!
உன் உதிரத்தை மொண்டு வார்த்து!
சதையை பிய்த்து தைத்த
நகல் என்பதாலோ,
அறிந்துவிடுகிறாயோ! என்னமோ!
நான் சிறிதாக முகம் சுழித்தாலும்!
அதன் இரட்டிப்பு பிரதிபலிப்பு...
உன்னிடத்தில்!
இறந்தபின்பு சொர்க்கத்தை நாடும் இங்கே!
நான் அவதரித்த கணமே! உன் இடையினில்...
அமர்த்தி சொர்க்க விடையளித்தாய்!
போதும் அத்தருணமே!
அதைவிட சிறப்பென்ன...
அப்பாலப்போன சொர்க்கத்தில்!
எனது சொப்பனத்திற்கு லஞ்சமாய்!
நீ கொடுத்த தாலாட்டு!
அதற்கு மழலை மொழியில்...
நான் உரைத்த பாராட்டு!
எனக்கு சிறிதாக சீராய்வு ஏற்பட்டாலும்!
சீரான வேகத்தில் தகவலை மூளைக்கு
எடுத்துச்செல்லும் ஹார்மோனுக்கும்...
சிலநேரம் பிடிக்கிறது!
அதற்குள்ளே! உமக்கு...
தகவல் கொடுத்தது யாரோ!
கோபத்திலும்!
மனம் நோகாமல் அதட்டலும்!
உடல் நோகாமல் அடித்தாலும்! என...
தாயின் கொள்கையை
மீறாததிருப்பது எப்படி!
பருவமழையும் பொய்த்துவிடும்
இக்கலிகாலத்தில்!
உமது பாசமழை பன்னிரெண்டு...
மாதங்களும் பொழிவதெப்படி!
காரியத்தில் கண்ணாய்இருப்பதெப்படி என்று...
உன்னிடத்தில் கண்டுணர்ந்தேன்!
உனக்கு காரியமும் நானே!
கண்ணும் நானே! ஆதலால்...
மூச்சுக்கு முன்னூறு முறை வந்து விழுகிறது!
கண்ணு கண்ணு என்று!
மண்ணரித்து மக்கி இத்துப்போன தகடாய்...
இருந்தும் உனக்கு தங்கமானேன்!
அடுத்தவேளை உணவிற்கு அல்லல்படும்...
ஆண்டியாய் இருந்தும் அரசனானேன்!
நீ! ராசா என மகுடம் தரிக்கும் தருணத்தில்!
செல்லரித்த காசுக்கும் இங்கே...
ஒரு விலையுண்டு!
செல்லாக் காசான நானும்...
உனக்கு செல்லம்மானதெப்படி!
நீ என்னை அழைக்கும் தருணங்களில்...
அணிகலன்கள் அனைத்தும் அரசரதத்தில்...
அணிவகுப்பதால்!
இட்டபெயரினை! மற்றபெயர்கள்...
இருட்டடிப்பு செய்துவிட்டன!
உள்ளத்தின் உறவுகளின் போட்டியில்...
எப்பொழுதும் உனக்குமட்டுமே!
தனிப்பெரும்பான்மை!
எண்ணத்தின் ஏடுகளனைத்திலும்...
உன் நினைவை அச்சுவார்க்கப்பட்ட...
அன்பின் மேன்மை!
இக்கணமே மரணிக்கிறேன்!
உன் தோழில் முகம் புதைந்து...
கண்ட சொப்பனம் நிரந்தரம் என்றால்!
இந்திரலோகத்தில் மன்னனாக மகுடம்
சூட்டின மாயையை கொடுத்த...
உனது மடியே! மயானம் என்றால்!
மறுஜென்மம் என்றிருந்தால்! அதில்...
உனக்கே மகனாய் பிறக்க வேண்டும்!
தொப்புள்கொடியை அறுக்காமல்...
அதைப்பற்றியே! உனது...
காலடியை சுற்றியே!
வயது முற்ற! உடல் வற்ற!
எனது உயிரை மட்டும் எமன்...
பற்ற வேண்டும்!