பிம்பமும்
சின்ன குறும்புச் சிரிப்பும் வழமை மிகு பளீரிடும் கண்களுடனும் பள்ளி விட்டு வந்த மாலைப்பொழுது
ஆரம்பமாகிறது டாலுவிற்கு
பிஞ்சுக் கையில் பிடரி மயிர் சிலிர்க்க வாய் பிளந்து சிங்கம் கர்ஜிக்கிறது
இது என்ன அன்பே என்கிறேன்
ம்..... நண்பன் கொடுத்ததாக கை அசைத்து சிரிக்கிறது குழந்தை
சிங்கம் மகிழ்கிறது.
எப்படி யென போலி விந்தை காட்டி வினவ விலாவரிக்கிறது ஆர்வமாய்
ஓ.... எனக்கென கேட்டவுடன்
புன்சிரித்து விலகிச் சென்று அதையே சிந்தித்து எது போல? என்கிறது.
எனக்கு. ... எது வேண்டுமானாலும் ...
எதுவெனக் கூற வலியுறுத்துகிறது
கன்னம் உரசி காதோடு .
தமயனுக்கு தெரியக் கூடாதென்ற குறும்புடன். ..
எதுவென்று தெரியாமல் விழித்திருக்க
போய் குட்டிப் பெட்டகமொன்றை எடுத்து வருகிறது
புலி சிங்கம் மான் காகம் ஓநாய் ...
அனைத்தும் பெட்டகத்தினுள் அமைதியாய் உறவாடிக் கிடக்கிறது
தேர்வு செய்கிறேன் முகமூடியொன்றை உள்ளதை மூடும் முகமூடியொன்றை அதுதான் சாலப்பொருத்தம் என்று .
அகமும் புறமும் மகிழ்ந்து
தெரியுமா உனக்கு கேள்வியொன்றை எழுப்புகிறது முகமூடியணியா குழந்தை
அணிந்து வாழ்கிறேனே தெரியாதா ..
இருந்தும் தெரியாதென்றே தெரிவிக்க
வா என கைப்பிடித்தழைத்து பிரித்தெடுத்து கழுவு நீர் குழாயில் தண்ணீர் சில துளிகள் எடுத்து ஒட்டி அமுக்கி பிம்பத்தை பதித்து மகிழ்கிறது குழந்தை .
சிரிக்கிறேன் பிம்பமும் இணைகிறது சிரிப்பில். ....
இது ஒரு டாட்டூவின் கதை. .