கற்பவர்களாலேயே ஒருவன் கற்பிப்பவன் ஆகிறான்

சில நிகழ்வுகளைக் நினைத்துப் பார்க்கையில் உடனடியாக நம்மீது நமக்கே "ச்சை! இப்டி பண்ணிட்டோமே. இப்படி நடக்க விட்டிருந்திருக்கக் கூடாது" என வெட்கம் வரும். அவமானமாக இருக்கும். இதுவும் அப்படித்தான். இது நடந்து சுமார் இரண்டு வருடங்கள் இருக்கும்.

தென்தமிழகத்தில் ஒரு பிரபல கல்லூரியில் திறன் மேம்பாட்டு வகுப்புகள் எடுக்கச் சென்றிருந்தேன். இந்தத் துறைக்கு நான் புதிது. எனக்கு அனுப்பப் பட்டிருந்த பாடங்களை "ஹ! என்ன புதுசா இருக்கப்போவுது? அதே நம்பர் சீரீஸ், லெட்டர் சீரீஸ், டைம் அண்ட் வொர்க் தானே. ட்ரெய்ன்ல போகையில பார்த்துக்கொள்ளலாம்" என விட்டுவிட்டேன். ட்ரெய்னில் பார்ப்பதற்கெல்லாம் வழியில்லை. ஏறியவுடன் படுத்தாகிவிட்டது. அடுத்தநாள் காலை முதல் வகுப்பு மேலான்மையியல் மாணவர்களுக்கு. இரண்டு வகுப்புகளை ஒன்றாக்கி ஒரு கலந்தாய்வு அறையில் உட்கார வைத்திருந்தார்கள். சரி சமாளிக்கலாம் என்று உள்ளே நுழைந்தேன். இப்போதைய முடி அமைப்போ, மீசை தாடியோ இல்லாமல் வசூல்ராஜா சுவாமிநாதன் மாதிரி இருப்பேன். பார்த்தாலே அவர்களை விட எனக்கு வயது குறைவு என பளிச்சென்று சொல்லி விட முடியும். ஒரு வழியாக என்னை அறிமுகப் படுத்திக்கொண்டு வகுப்பைத் தொடங்கி போய்க்கொண்டிருக்கையில் இரண்டு கணக்குகளைத் தீர்ப்பதில் சொதப்பி விட்டேன். லேசாக கை கால் நடுங்க ஆரம்பிக்கிறது. வகுப்பிலும் சலசலப்பு அதிகமாகிறது. பேச்சு சத்தம் அதிகமாகக் கேட்கிறது. வகுப்பின் உள்ளே உட்கார்ந்திருந்த அந்தக் கல்லூரி ஆசிரியர் தலையிடும் அளவுக்கு விஷயம் போய்விட்டது. நூற்றி இருவது பேருக்கு முன் மலங்க மலங்க நிற்கிறேன். இதோடு கற்பித்தலை விட்டுவிடலாம். எப்படியும் வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள் என்று பயந்துகொண்டிருந்தேன். அன்று சாயந்திரம் என்னை அழைத்த எங்கள் ஒருங்கினைப்பாளர். "சிவராமா! வா உன் கூட பேசனும்" என்றார்

"சொல்லுங்க சார்."

"என்னடா பண்ணி வச்ச அந்த க்ளாஸ்ல. என்னைய கிழி கிழின்னு கிழிக்குறாங்க"

சார்! அது...

"வேணாம்! சொதப்பிருக்க. அது மட்டும் தெரியுது. நாளைக்கு நேரா அதே க்ளாஸுக்கு போ. உன் ஃபீட்பேக்க நீயே வாங்கிட்டு என்னைய வந்து பாரு"

போனேன். தயக்கமும் அவமானமும் நிரம்பி வழிய. "நேற்றைய என் வகுப்பிற்கு பத்திற்கு எத்தனை மதிப்பெண் தருவீர்கள்" எனக் கேட்டேன். பெரிய மனது பண்ணி இரண்டு மதிப்பெண் கொடுத்திருந்தார்கள். நேராக ஒருங்கினைப்பாளரிடம் போனேன்.

"எவ்ளோடா குடுத்தாங்க?"

"ரெண்டு"

"நீ எங்க கோட்டை விட்டன்னு புரிஞ்சுச்சா? இது எல்லாருக்கும் நடக்கறதுதாண்டா. அடுத்த வாட்டி கன்டென்டை ப்ரிபேர் பண்ணாம க்ளாஸுக்குள்ள போகாத. போ போய் ப்ரிபேர் பண்ணு."

அன்றிலிருந்து இரண்டு, மூணு மணி ஆனாலும் அடுத்த நாள் புது பாடம் எனில் தயாராகாமல் தூங்குவதில்லை. அந்தப் பாடத்தை ஒரு நூற்றி இருபது பேர் எனக்குக் கற்றுக் கொடுத்தார்கள். கற்றல் கற்பித்தல் ஆசிரியரிடமிருந்து மாணாக்கருக்கு நகரும் ஒரு வழிப்பாதை இல்லை. அது ஒரு பரஸ்பர கொடுக்கல் வாங்கல். இரண்டு தரப்பும் பாடத்தையும் அனுபவத்தையும் பரிமாறிக்கொள்ளுகிற செய்கை. வகுப்பு முடிந்து வெளியே வருகையில் இரண்டு பேருக்கும் take away இருக்க வேண்டும். வெறும் பாடத்தை மட்டுமே எடுத்துக் கொண்டிருந்த என்னை கொஞ்சம் கதை, கதையை ஒட்டிய கணக்குக் கேள்விகள் என நகர வைத்திருக்கிறார்கள். புதிதாகச் சொல்ல வேண்டும் என தேடித் தேடி படிக்க வைத்திருக்கிறார்கள். அவர்கள் அளவுக்கு இறங்கி, கலாய்த்து, விளையாட வைத்திருக்கிறார்கள். இதுவரை யாருமே கேட்டிறாத கேள்விகளைக் கேட்டு திக்குமுக்காட வைத்திருக்கிறார்கள். கற்பவர்களாலேயே ஒருவன் கற்பிப்பவன் ஆகிறான். எனக்கு ஒரு ஆசிரியனாய் இருந்து என்னை ஆசிரியன் ஆக்கியிருக்கிறார்கள். பத்தாயிரம் பேரைச் சந்தித்திருக்கிறேன் என்னும் அனுபவத்தைக் கொடுத்திருக்கிறார்கள். அந்த கற்றுக்கொண்டு கற்பித்த ஆசிரியர்களுக்கும் என் நன்றிகள்
______________________________________________________________________
(இன்று குரு பூர்ணிமா:) சிவா

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (20-Jul-16, 7:22 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 163

மேலே