ரசிகன்
நடிகனின் படம் இன்று வெளியீடு
ஆவலுடன் காத்திருந்தான் பரம ரசிகன்
டிக்கெட்டு கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்
முண்டியடித்து முயன்றவனுக்கு கிடைக்கவில்லை
ஆரம்ப நாள் என்றதனால்
ஐந்து நிமிடம்தான் கொடுத்தார்கள்
கள்ளச் சந்தையிலே கணக்கின்றி வித்தார்கள்
பத்துமடங்கு விலையேற்றி
கையில் பணம் போதவில்லை
விரலில் விலைமிக்க ஒன்றிருந்தது
அடகு வைத்து வாங்கிவிட்டான் ஒன்று
அளவிடமுடியாத சந்தோசம் அவனுக்கு
அலைபேசியில் தகவல்வர அலுத்துக்கொண்டான் ரசிகன்
தற்போது முடியாது தலைக்குமேல் வேலையென்றான்
ஆர்ப்பரித்து பூமாரி பொழிந்தான் ரசிகன்
திரைமீது நடிகனை பார்த்தவுடன்
" கடைசி கடனையாவது தீர்த்துவைப்பான் மகன்
என்று காத்துகிடந்தாள் அன்னை பிணமாய் "