கண்ணீர்துளியில் நான், மழைத்துளியில் நீ

மேகமும் சோகம் கொண்டதோ ?
மௌனமாய் நான் விடும் கண்ணீர்த்துளி ,
மறைத்தேன் மற்றவர் கண்ணுக்கு,
மேகமோ கண்டுணர்ந்து வருத்தமடைய - அதற்கு
மற்றொரு மேகம் ஆறுதலாய் அணைத்துக்கொள்ள,
மிதக்கும் அவையிரண்டின் இணைத்தலால்,
மயக்கும் வானில் நீர்துளிகள் !

கண்கள் மட்டுமே நனைந்தது கண்ணீர்துளியால்,
காண இயலா மேகம் நனைத்தது என்னை மழைத்துளியால்,
கவலைக்கொண்ட மனம்,
கார்முகிலின் ஆறுதலால் களிப்பாகுமோ ?
கண்ணீர்துடைக்க மேகம் கொண்ட உறவு,
கைப்பிடிக்க எனக்கென வந்திடுமோ ?
கரம்பிடிக்க வந்திட்டால் மேகம் அல்ல என் கணவன்,
கசிந்திடும் நெஞ்சமும்,
கவிப்பாடும் கொஞ்சம் மழைத்துளிகளில் !

கனவு என்னை களவு செய்ய,
கணவர் அவர் நினைவு,
குளிர்த்திடும் மழையினையும் நெருப்பாக்குதே !

உடுத்திடும் உடையது மழையில் குளிர்ந்திடலாம்,
உருகும் உள்ளம் குளிர்ந்திடுமோ ?
உடையோ நனைகிறது நீர்துளியில்,
உள்ளமோ கொதிக்கிறது நினைவலையில்,
ஊமையென வாய் திறவாது தவித்தேன் தனிமையில்,
உதவாத நிலகரி என்னை - வைரமென
உருவாக்கிய உள்ளம்கவர் கள்வனை எண்ணி !

நிலை அறியாத நிலையில்,
நிலை மட்டுமல்ல என்னையே அறிய செய்த,
நாயகனை அருகில் காணயியலாது தவிக்கிறேன் !

காத்திருப்பேன் காலம் முழுதும்,
கைப்பிடிக்கும் என் கள்வனை எண்ணி,
கவர்ந்திட்டார் ஒரு சொல்லினாலே,
கவி படிக்கும் நெஞ்சங்களுக்கு இவை வரிகள்,
கவிஅமைத்திட்ட எனக்கோ இதுவே என் வாழக்கை
கொதிக்கும் நெஞ்சினை வெளிப்படுத்த தெரியாது,
கோர்த்தேன் கவியில் - அவர்
கண்களுக்கு செல்லாது என்றாலும்,
கொட்டி தீர்ப்பதால்,
கன்னி மனதில் சிறு நிம்மதி !

விரைவில் வந்து விரல் பிடித்திட காத்திருக்கிறேன் !!!

எழுதியவர் : ச.அருள் (28-Jul-16, 9:15 am)
பார்வை : 421

மேலே