இரைச்சலா , சங்கீதமா

இரைச்சலா , சங்கீதமா?

தினமும் பலப்பலவிதமான ஒலிகளைக் கேட்கிறோம்.
அசைவே வாழ்க்கையின் அடையாளம்.
ஒலியில்லாமல் அசைவில்லை.
அதனால் , ஒலியில்லாமல் வாழ்க்கையும் இல்லை.
ஆனால் சிலருக்கு சங்கீதமாக இனிப்பது, சிலருக்கு இரைச்சலாக கசக்கிறதே?
இரைச்சலா , சங்கீதமா? படித்துப் (கேட்டுப் ) பாருங்கள்!


இரைச்சல்

காலையில் கிண்கிணித் தொலித்து எழுப்பிடும்
நேரம் காட் டியின் நில்லா இரைச்சல்
காக்கை குருவி பறவைகள் கூட்டம்
பற்பல விதமாய் போடும் இரைச்சல்
வாசலில் நாட்தாள் போடும் பையனின்
வண்டி செய்திடும் டப் டுப் இரைச்சல்
பள்ளிக்குச் செல்லும் சிறுவரை அழைத்துச்
செல்லும் வண்டியின் பாம் பாம் இரைச்சல்
நிம்மதியாக இருக்க விடாமல்
நில்லா தடிக்கும் டெலிபோன் இரைச்சல்
மதியம் சிறிது ஓய்வெடுக்கையிலே
அடிக்கடி அடிக்கும் அழைப்பான் இரைச்சல்
நாளும் முடிந்து தூங்க முயல்கையில்
சுழலு மின்சார விசிறியின் இரைச்சல்
இரவு முழுவதும் இடைவிடாமல்
தெருவில் நாய்கள் குறைக்கும் இரைச்சல்.
இரவில் எங்கும் அமைதி சூழ்ந்தாலும்
மனதில் மட்டும் மௌனமாய் இரைச்சல்.
பகலும் இரவும் எங்கும் இரைச்சல்
வாழ்வே அதனால் முழுதும் எரிச்சல்

சங்கீதம்
அதிகாலையிலே கடிகாரத்தின்
கிணு கிணு ஓசை சங்கீதம்
பறவைக ளெழுப்பும் கீச் கீச் ஒலிகள்
காலை வேளையில் பூபாளம்
நாட்தாள் போடும் பையனின் வண்டியின்
தாளம் மேளத்தின் சங்கீதம்
பள்ளி ஊர்திக்குக் காக்கும் குழந்தைகள்
சிரித்துப் பேசுமொலி சங்கீதம்.
கைபேசிகளில் விதவிதமாக
கூப்பிடும் ராகங்கள் சங்கீதம்.
தன்னந் தனியாய் வீட்டில் இருக்கையில்
விருந்தினர் அழைப்பொலி சங்கீதம்.
சுழலும் விசிறியின் சீரிய சத்தம்
உறங்கச் செய்யும் சங்கீதம்.
தெருவில் நாய்கள் குறைக்கும் சத்தம்
திருடரைத் துரத்தும் சங்கீதம்.
நாளிலும் பொழுதிலும் பலஒலி கேட்டபின்
இரவின் மௌனமும் சங்கீதம்.
நன்றாய் இன்றொரு நாளும் முடிந்தபின்
நாளையும் தொடரட்டும் சங்கீதம்.

எழுதியவர் : ரமேஷ் (கனித்தோட்டம்) (28-Jul-16, 10:00 pm)
பார்வை : 55

சிறந்த கவிதைகள்

மேலே