சின்னச்சின்னதாய்
காளை யவன்
கரம் பிடிக்க முன்னே
மங்கையவள் உடல்
தொட்ட,
மல்லிகை
மலர் பெற்ற
வரம் இதுவோ?
*******************
வற்றிய குளத்தினிலே
நட்ட நடுவினிலே
உள்ள
பட்ட மரத்தினிலே
குந்தி
தன் இரைக்காய்
குறியாய் காத்திருக்கும்
பட்சியின் நம்பிக்கை கூட
ஏன் உனக்கில்லை
மனிதா?
********************
கருங்கற் பாரை
உடைத்து
மலை உயர
வீடமைத்துக் கொடுக்கும்
இரும்புக் கரம் படைத்த
மனிதன் வாழ
காய்ந்த புல் வேய்ந்த
ஓட்டை வீடு!!!
******************
ஊர்க்குருவி!!
*********************
என் சிறு வீட்டுக்கே
உன் வீட்டில்
இடமில்லை என்றால்
உன் அயல் வீட்டுக்கு
உன் மனதில்
இடமேது!!
*****************
எம் மண்ணில்
விண்ணின் விழாக்கோல
எச்சங்களாய்
மின்னல் தந்த இடியும்
மேகம் தந்த மழையும்
கொட்டோ கொட்டுன்னு
கொட்டியது இன்று!!!
*******************
தனிக் குடித்தனம் சென்றிட்ட
ஒற்றை ரோசாவை
துஸ்பிரயோகம் செய்கின்றன.
தேனீக்களும் வண்டுகளும்!!!!
***************
குயிலுக்கு அழகாய்
கூவத் தெரிந்தாலும்
குடி இருக்க ஏனோ
ஒரு சிறு மனை கூட
அதனால
அமைக்க முடிவதில்லை?
***************
தூது சென்றவனே
துணையாக்கிக் கொண்டான்!!
தோழி காதலியாகி
மனைவியானாள்!!
ஜவ்ஹர்