உயிர் நீ

படத்துக்குக் கவிதை (1)
கற்பனை ஊற்று
=================
நீ வண்ணங்களின் வேதனை
உன் வடிவை வடிவாய்
வரைய முடியவில்லையே என்று
வருந்திக்கொண்டிருக்கிறது தூரிகை.
பாகுபாடுகளை
வரையக் கற்றுக்கொண்ட சமூகத்தில்
பலிகடாவாகும் பாத்திரம் உனது
பார்வையால் பலரும் உன்னை
சிறையெடுத்துப் போய்விடக்கூடும்
என்பதற்காகவோ
சிறைபிடித்து வைத்தார்கள் சுவரில்
வண்ணத்துப்பூச்சியை
வாணலியில் விட்டு
வறுத்தெடுப்பதாய் உனது
வதனத்தை சிதைத்தது யார் ?
நீ தார் பீப்பாவுக்குள் விழுந்த
வானவில் .
ஓவியங்களும் உன்னை
ஓவியமாய் பார்த்து அதிசயிக்கும்
சித்திரத்தில் விசித்திரம் நீ
இக்கணம் நிலவே உனது கிரகணம்
உன் குறைதனை
நிறைவாக்க உன்னை
நவீனத்துவம் என்னும்
முத்திரைக் குத்தி மூடிவைக்கிறேன் நான்
கருமை சூழ்ந்த
வட்டத்துக்குள் கலங்கிநிற்கும் நீ
ஓர் நாள் காலத்தின் தூரிகை
நிகழ்த்திவைக்கும் வண்ணக்குளியலில்
மோட்சம் கொள்ளலாம்
ஆஹா.. ஓகோ ..அருமை செம
அற்புதம் அசத்தல் என்று
கண்ணை மூடிக்கொண்டு உனக்கு
ஒப்புக்கு நட்பு கொண்டாடும்
முகநூல நண்பனைப்போல்
ஓவியத்தை உள்வாங்கத் தெரியாமல்
கருத்துப்போட்டுக்கொள்ளலாம் ..
ஆனால் நீ உயிரென்பது
உன்னைத் தீட்டியவனின் உள்ளத்துக்கு
***************************
படத்துக்குக் கவிதை (2)
எல்லோரும் சித்திரத்தை கருப்பு
சிதைத்துவிட்டதைத்தான்
சொல்லிக்கொண்டிருக்கிறோம்
வண்ணங்கள் தன்னுடைய பரிபூரணத்தை
சிதைத்துவிட்டதாகப் புலம்பிக்கொண்டிருக்கும்
கருப்பின் மனதைப் புரியாமல் !
*மெய்யன் நடராஜ்
*******************************