திருக்குறளும் திருமந்திரமும்-8

திருக்குறளும் திருமந்திரமும்-8

”சிவப்பிரகாசம்” எனும் சைவ சித்தாந்த விளக்க நூல் எழுதிய உமாபதி சிவம் எனும் சிவனடியார், ஒரு நாள் தில்லையம்பதியில், பல்லக்கு ஒன்றில் சிறுமேடை அமைத்து அதில் அமர்ந்து, ஒளி விளக்குகள் நாற்புறமும் ஏந்தி வர, இசைக் குழுவினர் பஜனைப் பாடல்கள் பாடி வர ஒரு தெரு வழியாக வீதி உலா வரும் வேளையில், தெருவில் நடந்து சென்று கொண்டு இருந்த ஒருவர், அவரைப் பார்த்து, தன் அருகில் இருந்த மற்றொருவரிடம், “பட்ட கட்டையிலே பகற் குருடு போகிறது என்றார்”. பாதசாரியான அவரது இந்தக் குத்தலான பேச்சைக் கேட்ட உமாபதி சிவம், அவர் கூறிய சொற்களின் பொருள் புரியாமல் யோசிக்க ஆரம்பித்தார். சிறிது நேரம் கழிந்தபோது, பல்லக்குகள் பனங்கட்டைகளால் செய்யப்பட்டு அமரும் மேடை ஒரு மனைக் கட்டையாக பனை மரக் கட்டாஇயால் பட்டையாக செதுக்கப்பட்டு இருக்கும் என்பது புரிந்தது.. பகல் நேரத்தில், உலா செல்பவருக்கு அருகில் ஒளி விளக்குகள் ஏந்திச் சென்றதால், தம்மை ’பகற் குருடு’ என்று அவர் கூறியதில் அர்த்தம் உள்ளது எனப் புரிந்து கொண்டார். உடனடியாக பல்லக்கிலிருந்து கீழ் இறங்கி வந்து நடந்து போய், திருஞான சம்பந்தரைத் தேடிப் பார்த்து தன்னை சீடராக ஏற்குமாறு கேட்டு அவருடன் வாழ்ந்து ஞான தீட்சை பெற்றார்.. இவ்வாறு, ஒருவர் தன்னை அறிந்து கொள்வது என்பது காலப்போக்கில் அவருக்குக் கிடைக்கும் ஒரு அனுபவம்.

இதைப் போலவே, இறைவனை அறிவதும் அதற்கான தேடல் என ஒன்று இருந்தாலே போதும் அந்த அனுபவம் கிட்டிடும். கண்ணால் காண இயலாத, காதால் கேட்க இயலாத இறைவனை நாம் அனுபவத்தால் அறியலாம் என்பதனை கவிஞர் கண்ணதாசன்,

“அறிவெனப்படுவது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்.
அன்பெனப்படுவது யாதெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்.
பிறப்பு என்பது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்.
இறப்பின் பிண்ணனி யாதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்
அனுபவித்தே தான் அறிவது வாழ்வெனின்
ஆண்டவனே நீ ஏன் எனக் கேட்டேன்.
ஆண்டவன் சற்றே என் அருகில் நெருங்கி
அனுபவம் என்பதே நான்தான் என்றான்”

இவ்வாறு தேடல் இருந்தால் நாம் அவனை நெருங்குவோம்; அவனும் நம்மை நெருங்கி வருவான்.

கடவுளை நாம் பரம்பொருள் எனச் சொல்கிறோம். அவர் ஒரு தனிப் பரம்பொருள் என்றும் சொல்லுவோம் என்பதனால் ஏகமாய் நின்றவர், அதாவது தன்னிலையில் தனித்து நின்ற பொருள், ஆன்மாக்களில் வந்து உறைவது ஒரு வகை என அறிவோம். ஆன்மாக்களைத் தவிரவும் பிற அனைத்து பொருள்களிலும் அந்த பரம்பொருள் கலந்து நிற்பது இரண்டாம் வகை. இவ்வாறு ஆன்மாக்களில் தங்கியிருக்கும் அனேகன் ஆகிய இறைவனை தெய்வம் எனத் துய்த்து அவனை ஆரிந்து வழிபடுபவர்கள் ஒரு வகையினர். அவனை அறிவால் அறிந்து அவன் இன்னான், இத்தன்மைத்தானவன் என விளக்குபவர்கள் வேறு வகை. ஆனால், இறைவன் என்ற வார்த்தை, அனைத்துப் பொருள்களிலும் உறைந்து இருப்பவன், தங்கி இருப்பவன் என்ற அர்த்தத்தைக் கொடுத்தாலும் ‘அனேகன்’ என்ற அந்த ஒற்றைச் சொல்லே ஆன்மாக்களில் உறைந்து இருப்பவன் என்ற பொருளைத் தந்து விட்டதால், இறைவன் ஆன்மாக்களைத் தவிர வேறு பொருள்களிலும் தங்கி இருப்பவன் என்பதையே பொருளாகக் கொள்ள வேண்டும், இதனையே, அனைத்திலும் அனைத்துமாய் இருப்பவன் என்கிறோம்
இத்தகைய அந்த தனி ஒருவனை, ’ஏகம்’ எனக் கொண்டு அது ’சிவம்’தான் என ஆன்மாக்கள் துய்த்து மகிழ்கின்றன. இது வெளிப்படச் சொல்ல இயலாத அனுபவ நிலை என்பதால், அதுவே அப்பரம்பொருளின் உண்மை உருவம் ஆதலால், தொல்காப்பியம் முதலிய நூல்களில் ’சிவம்’ என்ற சொல் வெளிப்படையாக பயன் படுத்தபபடாமல், தடத்த நிலை சொற்களான ’இறைவன்’ அல்லது ’நீலமணி மிடற்று ஒருவன்’ போன்ற சொற்களால் குறிக்கப்பெற்றன. இறைவனை இவ்வாறு தெய்வம் என நிறுத்தி, அன்பினால் துய்த்து அனுபவித்த தமிழ் மக்களுக்கு தெய்வம் செம்பொருளாய் இன்பப்பொருளாய் இருந்ததால், மணிவாசகர், “தென்னாடுடைய சிவனே போற்றி என்றார். அவனையே, நின்மலன், நிர்குணன் என்றும் இறைவன் என்றும் உணரும் பொழுது, தமிழரின் அத்தகைய இன்பியல் துய்ப்பிறகு அயலாக உள்ள அனைத்து நாட்டவர்க்கும் அவன் இறைவன் எனக் கொள்ளுதல் வேண்டும் இதைத்தான்.,
”தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவற்க்கும் இறைவா போற்றி”

எனப் பரவியதோடு மாணிக்கவாசகர் தம் திருவாசகத்தில்

”நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க”

என இரத்தினச் சுருக்கமாகப் பாடியுள்ளார்.

தமிழ் மூதாட்டி ஒளவை எழுதிய மூதுரையில், “ தொல் உலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோக்கும் பெய்யும் மழை” என்றார். இதே கருத்தினை, குடிமக்கள் எல்லாம் அரசனின் செங்கோலை எதிர்பார்த்து வாழ்வர். குழந்தைகள், தாய் முலையில் சுரக்கும் பாலை நோக்கி வாழ்வர். உலகில் உள்ள உயிரினங்கள் எல்லாம் வானத்திலிருந்து விழும் மழைத்துளியினை எதிர் நோக்கி இருப்பர் என்பதோடு கூற்றுவனோ, அன்றாடம் யார் இறக்கிறார் என்பதை நோக்கி இன்புறுவான் என நான்மணிக் கடிகையில் விளம்பி நாகனார் கூறியுள்ளார்.

“கோல் நோகி வாழும் குடி எல்லாம்; தாய்முலையின்
பால் நோக்கி வாழும் குழவிகள்; வானத்
துளி நோக்கி வாழும் உலகம் உலகின்
விளி நோக்கி இன்புறூஉம் கூற்று (26)

இந்தப் பாடலின் முழுப்பகுதியிலும் திருவள்ளுவரின்,

“வானோகி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்னோக்கி வாழும் குடி (542)
என்ற குறட்பாவும்,

“விசும்பின் துளி வீழின் அல்லால் மற்றாங்கே
பசும்புல் தலைக்காண் பரிது”

என வரும் திருக்குறளின் கருத்துக்களும் பொதிந்து உள்ளன. . குலசேகர ஆழ்வாரும் இத்தகைய கருத்தினைத் திருவித்துவக்கோட்டுப் பதிகத்தில் மொழிந்துள்ளர். வான்சிறப்பைப் பாடும் இவர்கள், மழை முறையாகப் பெய்யாவிடின், மானிலத்தில் வாழும் மக்களுக்கு வாழ்வில்லை என்பதுடன், உலக நலம் கருதித் துறவிகள் புரியும் பூசனையும், தவமும் சிறந்தால்தான் மழை பொழியும். அவ்வாறு மழை பெய்யாவிட்டால், தேவர்களுக்கும் இவ்வுலகில் செய்யப்படும் திருவிழாக்களோடு நாள் வழிபாடுகளும் நடக்காது எனக்கூற வந்த வள்ளுவர்,

“சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு” (18)

இக்குறளுக்கான பரிமேலழகர் உரை யாதெனின்,
”வானோர்க்கும் ஈண்டுச் சிறப்போடு பூசனை செல்லாது - தேவர்கட்கும் இவ்வுலகில் மக்களால் செய்யப்படும் விழவும் பூசையும் நடவாது; வானம் வறக்குமேல் - மழை பெய்யாதாயின் (நைமித்திகத்தோடு கூடிய நித்தியம் என்றார் ஆகலின் 'செல்லாது' என்றார். 'உம்மை' சிறப்பு உம்மை. நித்தியத்தில் தாழ்வு தீரச் செய்வது நைமித்திகம் ஆதலின், அதனை முற்கூறினார்.)” என்பதாகும்.

இதனைக் கலைஞர் உரையாகக் கண்டோமெனில்,
”வானமே பொய்த்து விடும்போது, அதன் பின்னர் அந்த வானத்தில்
வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏது? வழிபாடுதான்
ஏது?”


இந்தக் கருத்தைக் கூறவந்த திருமூலர்,

“பிறப்பை யறுக்கும் பெருந்தவம் நல்கும்
மறப்பை யறுக்கு வழிபட வைக்குங்
குறப்பெண் குவிமுலை கோமள வல்லி
சிறப்பொடு பூசனை செய்ய நின்றார்க்கே”

திருவள்ளுவரின்”சிறப்பொடு பூசனை” என்ற சொற் கூட்டினை திருமூலதேவ நாயனார் அப்படியே எடுத்தாண்டு, அஞ்ஞானமாகிய காட்டினில் வாழும் இளமை நலம் குன்றாத குண்டலினியம்மை, சிறப்பாகத் தம்மிடம் பூசை செய்ய நின்றார்க்கு பிறப்பை அறுத்துப் பெரிய தவத்தின் பயனை அளிப்பாள; அறியாமை காரணமாகவுள்ள மறதியை ஒழித்துத் தன்னை சதாகாலமும் வழிபடச் செய்வாள் எனக் கூறுகிறார்.

பத்திரகிரியாரின் மெய்ஞானப் புலம்பல்களில் எக்காலக் கண்ணியாக கீழ்வரும் கண்ணியைப் பாடி இருப்பது காண்கிறோம்.

”பிறப்பும் இறப்பும்அற்றுப் பேச்சும்அற்று மூச்சும்அற்று
மறப்பும் நினைப்பும்அற்று மாண்டிருப்பது எக்காலம்? 206

இவ்வாறு இம்மை மறுமைகளின் தன்மையை ஆராய்ந்து அறிந்து இப்பிறப்பில் துறவறத்தைக் கொண்டவருடைய பெருமையே இவ்வுலகினில் சிறந்த பெருமை எனக் கூற வந்த திருவள்ளுவர்,


இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு என்றார். (23)நீத்தார் பெருமை எனச் சொல்ல வந்த திருவள்ளுவர், அவர்களை அறிமுகப்படுத்தும் முதற்குறளில் (எண் 21) ஒழுக்கத்தில் நிலையாக நிற்பவர் எனப் பொருள்பட ஒழுக்கத்து நீத்தார் என்றார். பின்னர், இல்லறம், துறவறம் என்ற இருமை ஒழுக்கத்தைக் கடந்தவர் என்றனர். அந்த ஒழுக்கம் என்னவெனில், இல்லறம் துறவறம் ஆகிய இரண்டும் கடந்த பின் தோன்றும் அறம் என்றார். ஆயினும் அது இருமை ஒழுக்கத்தைக் கடந்தது என்பதாலேயே, ஒழுக்கத்து நீத்தார், இருமை வகை தெரிந்து, இப்பூவுலகில் அறம் பூண்டவர் என்பதால், இக்குறளில் இருமை என்பது இவ்வுலகம், மறு உலகம் என்பதைக் குறிக்காது. இருவேறு வகைப்பட்ட நெறிகளைக் கொண்டு இயங்கும் இவ்வுலகில் இருமை நெறிகளில் நிற்காமல் , இருமைகள் நீங்கிய நிலையில் அமைந்ததாய் ஆனால் இருமையை இணைப்பதாக இல்லாமல் இருமையைக் கடந்ததாகிய ஓர் அறத்தில் நிற்க வேண்டும் என்பதே குறிக்கோள் என முனைவர் இரத்தினசபாபதி இக்குறலுக்கான விளக்கம் அளிப்பார். (பக்கம் 140, சைவ சித்தாத்தந்தில் ஆன்ம கொள்கை)
இதே கருத்தினைக் கூற வந்த திருமூல தேவ நாயனார்.
“இறப்பும் பிறப்பு மிருமையும் நீங்கித்
துறக்குந்த் தவங் கண்ட சோதிப்பிராணை
மறப்பிலராய் நித்தம் வாயுமொழி வார்கட்
கறப் பயன் காட்டும் அமரர் பிரானே” (திருமந்திரம் 1614)
இறப்பும் பிறப்புமாகிய இரு தன்மைகளும் நீங்கி, உலக இன்பங்களை இயல்பாகத் துறக்கின்ற, தவத்தை அருளிச் செய்த ஒளி வடிவினனை, மறவாதவராய் நாள்தோறும் நாத உபாசனை செய்வார்க்கு, சிவபிரான் சிவலோகம் அருள்வான் என்பதே இதன் பொருளாகும். சுருங்கக் கூறின், சோதிப் பிரானை மறவாது வழிபடுவோர்க்கு சிவலோகம் அருளுவான் என்பதாகும்.

எழுதியவர் : தா. ஜோ . ஜுலியஸ் (1-Aug-16, 12:59 pm)
பார்வை : 337

மேலே