பாலைவனத்துப் பறவை
இறக்கைகள் காற்றில் எரிவதாய்
சில நேரங்களில் உணர்ந்திருக்கக்
கூடும்...
யாரோ ஏற்றி வைத்த வெக்கை தீயில்
உருகி உடலில் ஊறும் மெழுகுகளாய்
ஊர்ந்திருந்தன அவற்றின்
வியர்வைகள்...
பசியில் வாடும்
சிறுவனின் துடுப்பசைப்பாய்
அசைந்திருந்தன அவற்றின்
சிறகுககள்...
தாகங்களின் தேக்கங்கள்..
கரகரக்கும் குரலசைப்பு..
ஏக்கங்கள் சுமந்து பறந்திருந்தன...
அப்பாலை வெளியும்..
வாழ்வின் வெளியும்..
வெற்றிடமாய் தெரிந்தது அவற்றிற்கு...
இளைப்பாற மரமும்
இறக்கை சாய கிளையும்
குரல் நனைக்க நீருமற்ற
கானல் நீர் வரப்பது...
கால் வைக்கும் இடங்களில்
வெம்மை வழிந்திருந்தது...
வசந்தங்களின் வருகையை
எதிர்நோக்கி காத்திருக்கும் கோடையை
தாமே சுழற்றுவதாய் நினைத்து
பறந்திருந்தன..
அவை தம் பாதை வழியே
நம்பிக்கையின் சிறகுகளை
அசைத்துப் போயிருந்தன என்
வாசலில்...