நெஞ்சு பொறுக்குதில்லையே

தேச விடுதலைக்குத் தொடர் முழக்கமிட்டு
தொண்டைக் கிழிந்தவர் ;

தொங்கும் வேளையில் தூக்கு ரத்தாகி
காயத்தழும்பைக் கழுத்தில் அணிந்தவர் ;

அடித்து நொறுக்கி அடிமை விலங்கை
அள்ளிக் காட்டியவர் ;

கழுத்தைப் பிடித்து நெட்டி வெள்ளையனை
கடலைத் தாண்டி தள்ளிவிட்டவர் ;

நாட்டை மீட்ட வகையில்
பல்லாயிரம் ஏக்கரைப் பறி கொடுத்தவர் - என
பட்டயம் பெற்றவர் பலருண்டு இங்கே.

சிறைக் கூடம் எழுப்ப
சித்தாளும், கொத்தாளும்
சீமையிலிருந்தா வந்தான்

சங்கிலியும் விலங்கும் சமைக்க
சம்மட்டி அடித்தது வெள்ளையனா ?

தூக்குக்கயிறு திரித்துக் கொடுத்து
தொங்கவிட்டு உயிர்ப்பறித்த தொடை நடுங்கி யார் ?

சவரம் செய்து சாணம் அள்ளி
ஈர் பேன் ஈயகற்றி
சவாரிக்குதிரைக்கு சேனம் பூட்டி
சீமைத் துரைக்கு சவுக்கை கொடுத்தது யார்
பகலிரவாய் அவனுக்கு
பணிவிடை செய்தவர் பட்டியல் எங்கே ? ......
நரியனூர் ரங்கநாதன்
செல் : 9442090468

எழுதியவர் : நரியனூர் ரங்கநாதன் (14-Aug-16, 4:14 pm)
பார்வை : 81

மேலே