என் மகள் எனக்குத் தாய்

களர் நிலமாய்க் காத்திருந்தக் கருவில்
வளர்ந்து மலர்ந்த மல்லிகை இதழவள்...
தாய்மை அடையாதப் பிறவியென்று தூற்றியவர்களை
வாய்திறந்து வாழ்த்த வைத்த மகளவள்......


மாணிக்க வீணையாய் மடியினில் தவழ்ந்து
மண் குடிசையினை மாளிகையாய் மாற்றியவள்...
அம்மா என்றெனை அழைக்கும் போதிலே
மடைத்திறந்த வெள்ளமாய் மகிழ்ச்சி தந்தவள்......


செம்பவள முத்தே செங்கமலைத் தீவேயென்று
கொஞ்சி முத்தம் தருவேன் அவளும்
சின்ன அதரங்கள் குவித்து தருவாள்
மொத்த உலகையும் சிலையென நிறுத்திடுவாள்......


விளையாடும் பருவத்தில் விழுந்து விடாமல்
விழிப்போடுப் பார்த்துக் கொண்டது நீதானம்மா
துவண்டு நீவிழும் நேரத்தில் விலகாது
தூண்களாய்க் காப்பதென் கடமை யென்றவள்......


இளந்தளிராய் வெயில் படாது நீதானம்மா
இளமை முதிர்ந்தும் நிழல் தந்தாய்
தண்ணிக் குடம் நீதான் சுமந்தால்
தாங்காதென் மனமென்று பிடுங்கிக் கொள்வாள்......


நடைப் பழகிக் கொடுத்தேன் அவளுக்கு
நடந்திடும் கால்களாய் இருக்கிறாள் எனக்கு...
பால் குடித்தப் பாச மகள்தான்
தோல்போல் என்னில் ஒட்டிக் கொண்டாள்......


கண்ணுறக்கம் மறந்து கடுகளவும் துன்பமின்றி
கண்மணியவளைத் தாலாட்டி துயில வைத்தேன்...
என் பக்கம் அமர்ந்துக் கொண்டு
எனைத்தான் அவளின்று தாலாட்டு கின்றாள்......


நெஞ்சுக் கூட்டோடு அவளை அனைத்து
இறைவன் எனக்களித்த வரமே நீயென்றேன்
இறைவனே எனக்கு நீதானென்று சொல்லி
சேய்அவள் தாயாக மாறினாளே எனக்கு......

எழுதியவர் : இதயம் விஜய் (19-Aug-16, 10:13 am)
பார்வை : 931

மேலே