தாய் தந்தையின் பிரிவு - போட்டிக் கவிதை

கருவில் என்னை சுமந்த அன்னையே
கருவாய் உன் வயிற்றில் நான் உருள
கைகளால் என்னை தடவி பார்த்து மகிழ்ந்தாயோ
கடமை என்று என்னை சுமந்தாயோ?

கருவறை மட்டுமே எனக்கு இடமளித்து -என்
கண்கள் திறந்து உன்னைப் பார்க்கும் முன்பே
குப்பைத் தொட்டியில் ஒரு குப்பையாய் எனை
கிடத்திவிட்டு சென்றது ஏனோ ?

என் உயிருக்கு உரமூட்டிய தந்தையே
எனக்கு உயிரை மட்டுமே கொடுக்க
முடிந்த உன்னால் உரிமையை கொடுக்க
உம் நெஞ்சுரம் இடமளிக்க வில்லையோ?


கண்ணே மணியே தாலாட்ட தாயின்றி
கதறிட நானும் தாய்ப்பாலின்றி
காக்கையும் , கழுகும் உணவின்றி
கொத்திக் கிழித்தன என் உடலினையே

கருணை நிறைந்த சிலராலே
காக்கப் பட்டேன் அந்தினம் தானே
கருணை இல்லம் எனை ஏற்று
கடவுளின் பொருளாய் வளர்த்ததுவே

என்றன் பெற்றோர் இவரெனவே
சுட்டிக்காட்டிட யாருமின்றி
ஏங்கித் தவித்தேன் தினம்நானே
ஏனோ உமக்கும் தோன்றவில்லை ?

பிடித்ததை வாங்க வழியுமின்றி
கிடைத்ததை உண்டு வாழ்ந்தேனே
நினைத்திட நினைத்திட கணம் தானே
நெஞ்சினில் இடியாய் இறங்கிடுதே !

உறவுகள் இன்றி உலகமதில் -தனி
ஒருவளாய் நானும் நடந்தேனே
நோய்கள் என்னை தொடர்ந்தாலும்
சிறு உதவிகள் இன்றி தவித்தேனே!

கல்வியை நானும் கற்று விட்டேன்
கையில் வேலை பெற்றுவிட்டேன்
குடும்பம் ஒன்று ஆன பின்னும் -என்
குடும்பம் காண விரும்புகின்றேன் !

அன்னையே உன்னில் ஒருநிமிடம்
என்னையும் நினைத்துப் பார்ப்பாயா ?
தந்தையே நீயும் ஓர் ஓரம் -என்
இழப்பின் துயரை நினைப்பாயா ?

என்றெண்ணியே நானும் நடப்பேனே
என் ஏக்கங்கள் என்று நிறைவேறும் ????

எழுதியவர் : பெ. ஜான்சிராணி (20-Aug-16, 7:19 pm)
பார்வை : 508

மேலே