தீராத்தாகம் தீரும்வரை
ஒரு தீராத்தாகம் போல், எழுதித் தீர்க்க நிறையவே இருக்கிறது...
மனஆறுதல்களுக்காய் கதைத்து தீர்த்தவைகள், நம்மை எச்சரிக்கும் ஆயுதமாய் அவர்கள் கைகளில் வளர்ந்து நிற்பதுதான் கொடுமையிலும் கொடுமை....
ஆச்சரியங்களையும், அதிசயங்களையும் தாண்டி
சோகமும், குரோதமும் சற்று கனதியானதுதான்.
அனுபவப் பகிர்வு எனும் பெயரில், என்னுடைய நாளைகளை, அவர்களுடைய நேற்றுக்களால் செதுக்க முனைபவர்களை அவ்வளவு எளிதாக கோமாளிகள் பட்டியலில் சேர்த்துவிட முடிவதில்லை...
விடைகள் மீது வினாக்கள் தொடுக்கும் என் புன்னகைமீது அவர்களுக்கு அவ்வளவாய் உடன்பாடில்லை, அதனால்த்தான் என் சந்தோச புன்னகையையும் அவர்கள் சந்தேக கண்ணோடு பார்க்கிறார்களாம்.
தொடக்கமென்று ஆரம்பிக்குமிடம் எதோ ஒன்றின் முடிவாகவும்,
முடிவு என்று முடிக்குமிடம் இன்னொன்றின் ஆரம்பமாகவும் எத்தனை, எத்தனை ஜாலங்கள்...
அத்தனையையும் பகுத்தறியும் சக்தி அந்தந்த கணங்களில் நீடிப்பதில்லை...
கத்திக் கதறி, மூச்சுமுட்டி எழுதுகையில்
பொங்கிவழியும் கண்ணீரில் நனையும் கன்னங்களும், காகிதமும், கலங்கும் பேனாமையும் ஆறுதல்கள்தான் என்பது அனுபவப்புதுமை!
என் எழுத்துக்களின் நிஜத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கும், படுகின்றவர்களுக்கும் ஆழ்ந்தஅனுதாபங்கள்...
ஆச்சரியக் குறியையும், கேள்விக்குறியையும் முடித்து வைக்கும் முற்றுப்புள்ளியின் திமிர் எனக்கும் கொஞ்சம் இருக்கிறது.
இப்படிக்கு,
தீரும்வரை எழுதத் துணிந்தவன்
முஸ்தாக் அகமட்