காதலும் காமமும் ------தமிழ்மணத்தில்

காதல் என்றால் என்ன?
காதல் என்பது ஒருவித உணர்வு என்று தெரிகிறது அது ஏன் வருகிறது,அது என்ன மாதிரியான உணர்வு?
காதலின் அடிப்படை:
"காமமே காதலின் அடிப்படை காரணம்"
-ஓஷோ
காதலின் அடிப்படை காமம் தான்.காமம் என்கிற அச்சைப் பற்றித்தான் காதல் என்கிற சக்கரம் சுழல்கிறது. "எங்கள் காதல் தெய்வீகமானது,மனம் சார்ந்தது உடல் சார்ந்தது இல்லை" என்று சிலர் வாதம் செய்து காதலின் காரணம் காமம் இல்லை என்று மறுத்துப் பேசலாம்,ஆனாலும் அவர்களின் ஆழ்மனத்தின் அடியாழத்தில் அவர்களும் ஆம் என்றே சொல்வார்கள். காமம் என்றால் ஏதோ கெட்ட வார்த்தை என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.காமம் இயற்கையானது.தேவையில்லாத உணர்வு இல்லை, இயற்கை வீணான எதையும் நமக்கு அளித்து விடவில்லை.நானும் நீங்களும் ஏன் இந்த பிரபஞ்சமே காமத்தால் உருவானது தான்.காதலின் அடிப்படை காரணம் காமம் தான்,ஆனால் காதல் என்பது வெறும் காமம் மட்டுமல்ல,தற்போதைய காலகட்டத்தில் அது வெறும் காமம் சார்ந்த விசயமாக மட்டும் பரிணாம வளர்ச்சி அடைந்து விட்டதோ என பயம் கொள்ள தோன்றுகிறது.
காதலும் காமமும்:
"இந்த பிரபஞ்சத்திலுள்ள அத்தனை விசயங்களும்
சமநிலையை நோக்கியே பயணிக்கின்றன ".
எதிர் எதிர் விசயங்களின் இணைவு தான் சமநிலை,அதுவே முழுமையும் கூட.இரவும் பகலும் இணையும் போதுதான் ஒரு நாள் முழுமை பெறுகிறது, எதிர்களின் இணைவுதான் முழுமை என்பதை கொஞ்சம் யோசித்தால் நாம் புரிந்து கொள்ள முடியும் இருட்டு-வெளிச்சம்,இன்பம்-துன்பம்,இப்படியாக சொல்லிக்கொண்டே போகலாம்,
இது போலவே ஆண் பெண் இணைவும் முழுமையை சொல்கிறது.ஆண் மீது பெண்ணும், பெண் மீது ஆணும் கொள்ளும் ஈர்ப்பு சம நிலைக்கான தேடல் தான்.
ஒரு குழந்தை தாயின் கர்பத்தில் உருவாகும் போது அது ஆணாகவோ பெண்ணாகவோ உருவாவதில்லை, ஆண்தன்மை,பெண்தன்மை இரண்டும் ஒருங்கே பெற்ற நிலையாக உருவாகிறது.இந்த நிலையை இரண்டுமற்ற நிலை(ரெண்டுங்கெட்டான்) என்று சொல்வதை விட இரண்டுமான நிலை என்று சொல்வது பொருந்தும்.ஒருவார காலம் வரை அந்த குழந்தை ஆண்,பெண் இரண்டும் கலந்த அர்த்தநாரியாகவே அதாவது 100% முழுமையானதாக இருக்கிறது (விஞ்ஞானம் இதனை ஆதரபூர்வமாக நிரூபித்துள்ளது).ஒரு வாரத்திற்கு பிறகே அது ஆணாகவோ, பெண்ணாகவோ மாற்றம் அடைகிறது.அப்படி அந்த கரு ஆணாக மாற்றம் அடையும் போது பெண் என்கிற தன்மையை தன்னகத்தே இழந்து விடுகிறது.பெண்ணாக மாற்றம் அடையும் போது ஆண் என்கிற தன்மையை தன்னகத்தே இழந்து விடுகிறது.
ஆண்,பெண் என்று அந்த குழந்தை பால் வேறுபாட்டுடன் பிறக்கும் போது முழுமையின் இழப்பாகவே பிறக்கிறது.இழந்துவிட்ட பாகத்தை இணைத்துக்கொள்ள ஆர்வம் கொள்கிறது.ஒரு உயிர் முழுமை பெற வேண்டுமானால் ஆண்,பெண் இணைவு அவசியமாகிறது.(சில ஞானிகளும்,யோகிகளும் தங்களுக்குள் மறைந்துவிட்ட அந்த ஆண் அல்லது பெண் தன்மையை இணைத்துக் கொண்டு பிற உயிரின் துணையின்றியே முழுமை பெறுகிறார்கள்,ஆனால் இது அனைவருக்கும் சாத்தியமில்லை)
முழுமை பெற வேண்டும் என்ற பேரார்வம் ஆணுக்கு பெண் மீதும் பெண்ணுக்கு ஆண் மீதும் ஈர்ப்பாக பரிமானம் எடுக்கிறது.இந்த ஈர்ப்பு தான் காமம்.காமத்தின் காரணமாகத்தான் பூ மலர்கிறது, குயில் கூவுகிறது,தோகை விரித்து மயில் ஆடுகிறது.உலகின் நிலைப்பாட்டிற்காக இயற்கை நமக்குள்ளே வைத்துள்ள ரகசியம் காமம். கோபம்,சந்தோசம்,அழுகை இது போல காமம் என்பதும் ஓர் உணர்வு,ஆனால் உணர்வுகளை வெளிப்படுத்தும் முன் இடம்,பொருள்,ஏவல்...காலம்,நேரம்,பின் விளைவு என சகலவிதமான முறைகளில் சிந்தித்து செயல்படுத்த வேண்டும்.இது காம உணர்வுக்கும் பொருந்தும்.இல்லையென்றால் மனிதனுக்கும் மிருகத்துக்கும் வேறுபாடு இல்லை.காதல் என்கிற பெயரில் நடைபெறுகிற காம களியாட்டங்கள் நாகரிக வளர்ச்சியில் பின்னோக்கி செல்கிறோமோ என்று சந்தேகம் கொள்ள செய்கின்றன.
காதல் என்றால் என்ன?
காதலின் அடிப்படை காமமாக இருக்கலாம் ஆனால் காமம் மட்டுமே காதலாகி விடாது,காதல் என்கிற உணர்வு இல்லாமல் கூட திருமணம் செய்து கொள்ள முடிகிறது, குழந்தை பெற்றுக்கொள்ள முடிகிறது.
"காதல் என்பது காமத்தின் வழியாக காமத்தை கடந்து செல்லும்
முழுமையை நோக்கிய பயணம்".

காதலானது வெறும் உடல் சார்ந்த தேடலாக மட்டும் இருக்கின்ற பட்சத்தில், தேவை முடிந்த பின் காதல் தேவையற்றதாகி விடுகிறது. பெரும்பான்மையான காதலுக்கு திருமணம் முற்றுப்புள்ளியாக அமைவதற்கு காதல் வெறும் உடல் தேடலாக மட்டும் இருப்பதே காரணமாகும்.
காதல் ஒரு குறிப்பிட்ட நபர் மீது மட்டும் ஏற்பட காரணம் என்ன?

உடல் சார்ந்த ஈர்ப்பும் உள்ளம் சார்ந்த ஈர்ப்பும் ஒருங்கே ஒருவர்மீது ஏற்படுமாயின் அது காதலாக பரிணமிக்கிறது.(ஒருவரின் பார்வையில் அழகில்லாதவராக இருக்கும் ஒருவர் மற்றொருவருக்கு அழகானவராக தெரியலாம்,ஆக உடல் சார்ந்த தேடல் என்பது அழகு சார்ந்த விசயம் மட்டுமல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.).தனக்கு வரப்போகிற காதலனோ,காதலியோ இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு மன பிம்பம் இருக்குமாம் (மூக்கு இந்த மாதிரி இருக்க வேண்டும்,உதடு இப்படி இருக்க வேண்டும்,கண்கள் இப்படி இருக்க வேண்டும் என்று இப்படி எத்தனையோ 'இப்படிகள்' ),அந்த மானசீக உருவத்துடன் பொருந்துகின்ற மாதிரியான நபர் நம் கண்களில் பட்டவுடன் நமக்குள் பட்டாம் பூச்சி பறக்க ஆரம்பித்து விடுகிறது காதல் உணர்வு பசக் என்று பற்றிக்கொள்கிறது.இதன் காரணமாகவே காதல் என்கிற உணர்வு சிலருக்கு சிலர் மீது மட்டும் வருகிறது.
ஆண் ஒரு பெண்ணை பார்த்த உடனேயே கூட அவள் மீது காதல் கொள்ள முடியும், ஆனால் பெண் "இவன் நம்மை வைத்து காப்பாற்ற லாயக்கானவனா?,இவனிடம் எவ்வளவு பணம் இருக்கிறது,இவன் நமக்கு சரியான துணை தானா? என்று பலவாறு யோசித்த பின்னரே காதல் கொள்கிறாள். (இந்த எச்சரிக்கை உணர்வு பெண்களிடம் குறைந்து போன காரணத்தினால் தான் எத்தனையோ பெண்கள் ஏமாற்றப்படுகிறார்கள் )
காதலின் ஆயுள் எத்தனை நாட்கள்:
"பெரும்பாலான காதல்கள் திருமணத்தில் முடிவடைகிறது".

திருமணத்திற்கு பின் காதல் தன்னை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க ஆரம்பிக்கிறது.திருமணங்கள் காதலின் முற்றுப் புள்ளியாக இருக்க என்ன காரணம்??.காதல் ,திருமணத்திற்கு பின் நான்கு வருடங்கள் தொடர்கிறது என்று ஒரு ஆராய்ச்சி முடிவு சொல்கிறது,எனக்கு இந்த ஆராய்ச்சி முடிவில் நம்பிக்கை இல்லை.ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்கிற மாதிரி ஒட்ட மொத்த உலகிற்கும் இந்த ஆராய்ச்சி முடிவு பொருந்தும் என்று சொல்ல முடியாது.
காதல் உணர்வு ஒரு பெண்ணையோ, அல்லது ஒரு ஆணையோ பார்க்கும் போது நமக்குள் வருகிறது,அப்போது நமக்குள் சில ரசாயணங்கள் சுரக்கின்றன,இவை போதை தரும் ரசாயனங்கள் என்று விஞ்ஞானம் சொல்கிறது.அவை ரத்தத்தில் கலந்து காதலின் போதையை நமக்கு தருகிறது.மனம் ஒரு போதையை விரும்பி விட்டால் அதை மீண்டும் மீண்டும் கேட்கும்,காதல் போதை விசயத்திலும் இதே கதை தான் ஆனால் குறிப்பிட்ட ஆணோ,பெண்ணோ தொடர்ந்து பழக்கப்பட்டு போன பிறகு ரசயானக்கலவை எதிர்பார்த்த போதையை தருவதில்லையாம்.வேறு ஒரு புதுக் காதலை எதிர்பார்க்க துவங்குகிறதாம்.(நான் சொல்லவில்லை ஆராய்ச்சி சொல்கிறது).காதல் திருமணங்களில் தோல்வி யடைய விஞ்ஞானம் சொல்லும் காரணம் அனைவரது வாழ்விலும் பொருந்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
ஒருவரை நாம் காதலிக்கும் போது நமக்குள் காதல் உணர்வு(வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையே உருவமில்லா உருண்டை,பட்டாம்பூச்சி பறத்தல்.....) வருகிறது.ஆனால் பெரும்பாலான நபர்கள் அந்த உணர்வுகளை நமக்குள் முதன்முதலில் கொடுத்த காதலனையோ அல்லது காதலியையோ காதலிக்காமல் அந்த உணர்வை மட்டும் காதலிக்க துவங்குகிறோம்,பெரும்பாலான கதைகளில் இது தான் நடக்கிறது.காதலின் போதை குறைய ஆரம்பிக்கும் போது காதலன் அல்லது காதலி மீது நமக்கு வெறுப்பு வருகிறது,எது செய்தாலும் குற்றமாக படுகிறது.
காதலை நமக்குள் பூக்க செய்த அந்த நபரை நாம் நேசிக்க துவங்கினால்,நம் நேசம் என்றைக்கும் புதுமையானதாக இருக்கும்.இயற்கை நமக்குள் அந்த போதை வஸ்துவை சுரக்கச்செய்து காதலின் போதையை என்றும் தரும்.
காதல் என்பது காமத்தின் வழியாக காமத்தை கடந்து செல்லும்
முழுமையை நோக்கிய பயணமாக பரிணமிக்க வேண்டும்.
உண்மையான காதலை உணர வேண்டும் .உண்மையான காதல் உணரப்பட வேண்டும்.

எழுதியவர் : (29-Aug-16, 10:59 pm)
பார்வை : 175

சிறந்த கட்டுரைகள்

மேலே