​உள்ளத்தில் பூக்காத அன்பு

​உள்ளங்கள் உண்டு பிறக்கும் மனிதர்க்கு
உயிராகத் துடிக்கும் உள்ளவரை உலகில் !
ஈரமுள்ள இதயமே இவ்வுலகிற்குத் தேவை
ஈடேது இணையேது இடைவிடா சேவைக்கும் !

பூத்திடும் மனத்தால் பூமனம் என்பாரோ
பூமழை பொழியும் பூமியில் என்றாரோ !
பூத்திடும் அன்பால் பூலோகம் மகிழ்ந்திடும்
பூரிக்கும் உள்ளத்தால் பூமியும் குளிர்ந்திடும் !

அன்பெனும் பூக்கள் அகத்தினில் மலர்ந்து
அகிலத்தில் சொரிதல் அளித்திடும் ஆறுதல் !
அடுத்தவர் நலனை தடுத்திடா நெஞ்சத்தால்
அன்பும் வாழும் நிலைத்திட வழிவகுக்கும் !

பூத்திடா அன்பால் பலனில்லை பூமிக்கு
பூஞ்சோலை ஆகாது புவியும் மகிழாது
சமத்துவம் பிறக்காது சமூகம் சிறக்காது
சமுதாயக் கவலைகள் என்றுமே தீராது !

தொடரும் வன்முறைகள் வளராது மறைந்து
இதயங்கள் இணைந்தால் இனிக்கும் வாழ்வும்
அன்பிலா உள்ளங்களில் பூத்திடும் அன்பும்
பூத்திடா உள்ளங்களும் பூத்துக் குலுங்கிடும் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (1-Sep-16, 8:29 am)
பார்வை : 260

மேலே