நினைத்து நினைத்து
என் பள்ளிக் காலத் தோழர்களுக்கு சமர்ப்பணம்.
வசந்தம் முடிந்தால் இலைகள் உதிரும்.
நாங்களும் உதிர்ந்தோம்.நாட்கள் நகர்ந்தன.
காற்றின் திசையில் பயணப் பட்டோம்.
உலகம் என்னவோ ஒரு உருண்டைதானே.
மீண்டு(ம்) வந்தோம் தொடக்கப் புள்ளிக்கு.
கோடுகள் புள்ளியில் இணைந்த நிமிடம்
வீடு மறந்தன. குடும்பம் மறந்தன.
சொந்தமும் சுற்றமும் பறந்தே போயின.
மிச்சம் சொச்சம் இருந்தது எல்லாம்
அச்சுவெல்லமாய் நட்பு மட்டுமே.
பிச்சுப் பிச்சுப் தின்றோம் நாங்கள்
தீரவும் இல்லை! திகட்டவும் இல்லை!
முடிந்த நாளை சபித்தது மனம். மீண்டும்
விடியுமா வென நினைத்தது தினம்.
உலகம் என்னவோ ஒரு உருண்டைதானே.
மீண்டு(ம்) வருவோம் அந்த தொடக்கப் புள்ளிக்கு
அதுவரையில்
கட்செவியின் உட்புகுந்து உலாவுவோம்
நட்பைச் சுமக்கும் ஆவிகளாய் நாங்கள்.
முகநூலின் முகவரியில் குலாவுவோம் .மீண்டும்
அகமகிழும் அந்த நாளை நினைத்து...நினைத்து....
உங்கள்...
மாமுகி.