வரம் வாங்கிய சொற்கள்

இதழ் பூட்டிய மௌன சிறைகளில்
சிறைபட்டுக் கிடக்கிறது
ஊடல் கொண்ட இதயத்தின் சொற்கள்
*
இறுகிக் கிடக்கும் மௌனத்தையும்
உடைக்கும் உளியாகிறது
கண்ணீர் கண்டு கசியும் சொற்கள்
*
புரட்டி படிக்க விழிகளின்றி
புத்தக பக்கங்களில் போர்த்தி துயில்கிறது
புத்தன் உதிர்த்த போதனை சொற்கள்
*
ஆலகால விஷம் தடவி ஆயுளுக்கும் கொல்கிறது
என்னை மறந்து விடுங்கள் என்று
என்னவளின் இதழ் உதிர்த்த
அன்பை மறந்த சொற்கள்
*
காலம் காலமாக ஓதப் பட்டும்
கண் விழிக்கச் செய்ய வில்லை
கடவுளின் காதுகளில் விழும்
புரோகிதர்களின் மந்திரச் சொற்கள்
*
தப்பு தப்பாய் பேசினாலும்
தன்னை மறக்க செய்கிறது
அதோ...
தவழும் குழந்தையின் இதழ்களில் வழியும்
தவம் கிடந்து வரம் வாங்கிய சொற்கள்

எழுதியவர் : மணி அமரன் (8-Sep-16, 10:08 pm)
பார்வை : 301

மேலே