எனதருமை மாணவனுக்குப் பிறந்தநாள் இன்று

எனதருமை மாணவனே ! எல்லோர்க்கும் இனியவனே !
உனதருமை நீயுணர்ந்து உலகினிலே சிறந்திடுவாய் !
சினத்தையுமே நீவிடுத்து சிந்தையிலே அமைதியான
மனத்தினிலும் மேலோங்கி மகிமையுடன் வாழ்ந்திடுவாய் !


இன்றுனக்குப் பிறந்தநாளாம்; இல்லத்திற்குத் திருநாளாம் .
என்றென்றும் அன்புடைய என்னுடைய மாணவனே !
உன்றன்மனம் நானறிவேன் உலகத்தார் யாரிவரோ!
முன்கோபம் கொண்டவனே ! முகவழகு கெட்டுவிடும் .


அற்புதமான மாணவனே ! அகிலத்தின் சான்றாவாய் !
பொற்புடைய கல்வியினால் பொன்றாத இடந்தன்னைக்
கற்றவர்கள் முன்னிலையில் களிப்புடனே பெற்றிடுவாய் !
உற்றவர்கள் உனையும்தான் உன்னதமாய்ப் போற்றிடுவர் .


பத்தாவது வகுப்பினிலே பாலகனாய் என்னிடமே
வித்தைகளைக் கல்விதனில் விருட்சமாகக் கற்றுத்தேர்ந்த
உத்தமனே ! அந்நாளில் உணர்ந்தேனே உன்திறமை .
புத்திமதி நானுரைப்பேன் புகழ்பெறுவாய் என்றென்றும் .


சாதித்தாய் நீயன்றோ சான்றாகப் பள்ளியிலே
வாதிடுவாய் பலமுறைகள் வந்தருகே அமர்ந்துகொண்டு
போதிப்பேன் யானும்தான் போதனைகள் ஏற்றுநீயும்
பாதிப்புகள் ஏதுமின்றிப் பட்டறிவால் உணர்ந்திடுவாய் .


பெற்றோரை மதித்திடுவாய் ! பெருமைபல பெற்றிடுவாய் .
மற்றோராய் எண்ணாமல் மறவாது பெற்றோர்சொல்
உற்றவனாய்க் கேட்டிடுவாய் உத்தமனாய் வாழ்ந்திடுவாய் .
பெற்றவர்கள் உனைப்போற்ற பேரின்பம் அடைந்திடுவாய் .


சினம்மட்டும் இல்லையெனில் சீர்பெறுவாய்க் காசினியில்
குணத்தைத்தான் அழிக்கின்ற குறையறிவே சினமென்பேன்.
உணர்ச்சியினால் உன்னிடமே உருவாகும் முன்கோபம்
பிணக்குகளும் தந்திடுமே பிழையாகும் எதிர்காலம் .


உதவுகின்ற மனப்பான்மை உன்னிடமே கண்டதுண்டு .
பதவிகளை எதிர்பாரா பக்குவத்தின் சான்றாவாய் .
விதவிதமாய் நெஞ்சத்தில் வித்திடுவாய் காலமதை .
எதனாலோ தெரிவதில்லை எதுவுமே நடப்பதில்லை .


பன்னிரெண்டாம் வகுப்பினிலே பாரினிலே உயர்ந்திடவும்
உன்திறமை வெளிப்படவும் உன்சிறப்பைக் காட்டிடவும்
அன்றன்றே படித்திடுவாய் அனுதினமும் எழுதிப்பார்த்து
வென்றிடுவாய் பள்ளியிலே வெற்றிகளும் உனைச்சேரும் .


விளையாட்டில் நாட்டமது விருப்பம்போல் கொண்டவனே !
இளைப்பாற விளையாட்டு இன்றுனக்குப் போதுமென்பேன் .
காளையர்க்கு வீரமென்றால் காரணமே விளையாட்டாம் .
நாளைக்குநீ சாதிக்க நாள்தோறும் கற்றலன்றோ ?


நண்பர்கள் பலருண்டு ; நல்லவர்கள் இனங்கண்டு
மண்ணுலகம் போற்றும்படி மாணவனே நீவாழ்வாய் .
கண்படாது உன்றனையும் காத்திடுவார் கடவுளன்றோ .
விண்ணுலகம் தொடும்வரையில் விரைந்துநீயும் சாதிப்பாய் !


ஆசானை மதித்திடுவாய் ! அவர்பின்னே சென்றிடுவாய் .
வாசமுள்ள வாழ்வுனக்கு வாய்த்திவிடும் எந்நாளும் .
பாசமுடன் நடந்திடுவாய் ! பண்புடனே நின்றிடுவாய் .
மாசற்ற குணநலன்கள் மாண்புடனே பெற்றிடுவாய் .!!!

கவிதையாக்கம் :-
பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்
திருச்சி , தமிழ்நாடு .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (10-Sep-16, 3:57 pm)
பார்வை : 65

மேலே