மூட மனமில்லா புத்தகம் - நட்பு
மனமென்னும் நூலகத்தில்
நினைவுகள் என்னும் புத்தகத்தை எடுத்தேன்.
மெல்ல மெல்ல புரட்டிய பக்கங்கள் - என்னை
மெய்சிலிர்க்க வைத்ததென்ன!
எத்தனைப் பக்கங்கள் புரட்டினாலும்
எள்ளளவும் குறையவில்லை என் நட்பின் பதிவுகள்.
கேலியாய் கொஞ்சம் , கிண்டலாய் கொஞ்சம்,
கோபமாய் கொஞ்சம் ,சிறு சிறு சண்டைகளாய் கொஞ்சம்,
அன்பாய் கொஞ்சம், அரவணைப்பாய் கொஞ்சம்,
கண்ணீராய் கொஞ்சம், கலகலப்பாய் கொஞ்சம்.
புரட்டப் புரட்ட - நட்பின்
புனிதத்தை நான் உணர்ந்தேன்.
பிரிந்து வந்த தருணத்தை - இன்றளவும்
புரிந்து கொள்ள முடியவில்லையே!
அன்னைக்கும் தந்தைக்கும் அடுத்ததாய்
ஆண்டவன் படைத்தான் நண்பர்களை
ஆதி முதல் இன்று வரை - எனக்குள்
அணுவும் அசைவதில்லையே என் நண்பர்களின்றி!
தன்னந்தனியே தவிக்கும் போதெல்லாம் - அன்பின்
தாகம் தீர்க்கும் நட்பின் நினைவுகள்.
மூச்சு விட மறந்தாலும்
முயன்று கூட பார்த்ததில்லை நட்பை மறக்க!
அனிச்சையாய் துடிக்கும் இதயமாய்
அனுதினமும் துடிக்கிறேன் நண்பர்களின் முகம் காண!
திறந்த புத்தகத்தை மூட மனமில்லை
திறந்தே வைத்திருக்கிறேன் மீண்டும் நட்பின் பதிவுகளை வேண்டி. ........