தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடி சி வை தாமோதரம்பிள்ளை

பண்டைய சங்கத் தமிழ் இலக்கியங்களின் பாதுகாவலரும், பதிப்புத் துறை முன்னோடியுமான. சி. வை. தாமோதரம்பிள்ளை

(C. W. Thamotharampillai) பிறந்த தினம் செப்டம்பர் 12. 1832. (12 செப்டம்பர் 1832 - 1 சனவரி 1901)

சிறுப்பிட்டி வைரவநாதபிள்ளை தாமோதரம்பிள்ளை பண்டைய சங்கத் தமிழ் நூல்கள் செல்லரித்து அழிந்து போகாது, தமது அரிய தேடல்கள் மூலம் அவற்றை மீட்டெடுத்து, காத்து, ஒப்பிட்டு பரிசோதித்து, அச்சிட்டு வாழ வைத்த முதல்வர். தமிழின் நூல்கள் தொடர்ந்து தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டும். தமிழின் பெருமையை, அருமையை தமிழர் உணர்ந்து உயர வேண்டும் என்ற அரிய நோக்கங்களோடு தொண்டாற்றியவர்.

தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடி
இலங்கை யாழ்ப்பாணம் அருகே உள்ள சிறுப்பிட்டியில் (1832) பிறந்தவர். தந்தை வைரவநாதப் பிள்ளையிடமே தமிழ் பயிலத் தொடங்கியவர், உயர்நிலை இலக்கண, இலக்கியங்களை கவிராயர் முத்துக்குமாரரிடம் கற்றார்.

lஅமெரிக்க மிஷன் பாடசாலை யில் ஆங்கிலம் பயின்றார். யாழ்பாணம் வட்டுக்கோட்டை பல்கலைக்கல்லூரியில் கணிதம், மெய்யியல், வானவியல், அறிவியல் கற்றார். கோப்பாய் சக்தி வித்யாசாலையில் சிலகாலம் ஆசிரியராகப் பணியாற்றினார்.

‘நீதிநெறி விளக்கம்’ நூலை 1853-ல் பதிப்பித்து வெளியிட்டார். இதன்மூலம், தமிழ்ப் பதிப்புத் துறையின் முன்னோடி என்ற பெருமை பெற்றார். புத்தகங்கள் வெளியிடுவதில் இளம் பருவத்திலேயே இவர் கொண்டிருந்த ஆர்வம்தான் தமிழ் மக்களுக்கு பல அரிய நூல்களைப் பெற்றுத் தந்தது.

lயாழ்ப்பாணம் மத்திய கல்லூரித் தலைவர் பீட்டர் பெர்ஸிவல், தமிழகத்தில் நடத்திய ‘தினவர்த்தமானி’ பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்று, சென்னை வந்தார். சென்னை ராஜதானிக் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராகவும் பணிபுரிந்தார். பல ஆங்கிலேயர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுத்தார்.

1858-ல் சென்னை பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பி.ஏ. பட்டப்படிப்பில் மாநிலத்திலேயே முதல் மாணவராகத் தேறினார்.

அரசு வரவு செலவுக் கணக்குச் சாலையில் கணக்கு ஆய்வாளராகச் சேர்ந்தார். விரைவில் துறைத் தலைமை அதிகாரியானார். 1871-ல் சட்டப் படிப்பை முடித்து, கும்பகோணத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். 1884-ல் புதுக்கோட்டை நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1895-ல் ‘ராவ் பகதூர்’ பட்டம் பெற்றார்.

அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற இவரை, புதுக்கோட்டை சமஸ்தானத்தின் தளவாய் பொறுப்பை ஏற்குமாறு அரசு கேட்டுக்கொண்டது. தமிழ் நூல்களை அச்சிடுவதில் இருந்த ஈடுபாட்டின் காரணமாக அந்த வாய்ப்பை மறுத்து, கும்பகோணம் கருப்பூரில் குடியேறினார்.

வழக்காடுவதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு தமிழ் நூல்கள் பலவற்றை முழு மூச்சாக பதிப்பித்தார். பண்டைய தமிழ் ஏடுகளைத் தேடி, தமிழகம் முழுவதும் சுற்றினார். சேதமடைந்த ஏடுகளை மிக கவனமாகப் பிரித்து, பிரதி எடுத்துப் பதிப்பித்தார்.
மிகவும் சிரமப்பட்டு தொல்காப்பியப் பொருளதிகாரச் சுவடிகளை தேடிக் கண்டுபிடித்தார். அதை சரிபார்த்து, அச்சிட்டு தமிழகம் முழுவதும் கிடைக்கச் செய்தார். இந்த அரிய பணியை தமிழ் அறிஞர்கள் வியந்து பாராட்டினர்.

வீரசோழியம், திருத்தணிகைப் புராணம், கலித்தொகை, சூளாமணி, இலக்கண விளக்கம் உட்பட பல நூல்களைப் பதிப்பித்தார். கட்டளைக் கலித்துறை, சைவ மகத்துவம், வசன சூளாமணி, நட்சத்திர மாலை உட்பட பல நூல்களைப் படைத்தார்.

தமிழ் இலக்கிய வரலாற்றில் நிலையான இடத்தையும், நீடித்த புகழையும் பெற்றவர். தமிழ்ச் செவ்வியல் நூற்பதிப்பு வரலாற்றில் புதிய தடத்தை உருவாக்கியவர். ‘செந்தமிழ்ச் செம்மல்’, ‘தமிழ் நூற்பதிப்புப் பணியின் தலைமகன்’ என்று பாராட்டப்பட்ட சி.வை.தாமோதரம் பிள்ளை 69-வது வயதில் (1901) மறைந்தார்.

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (14-Sep-16, 11:53 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 126

சிறந்த கட்டுரைகள்

மேலே