உயிராய் அவள்

அரும்பும் இதழில் அழகு புன்னகை அணிந்தவள்
அருகில் வந்தே அமுதைப் பொழியும் அணங்கவள்!
ஆலய மணியின் அமைதியை நாளும் அளிப்பவள்
ஆலம் விழுதாய் ஆயிரம் உறவை அணைப்பவள் !
இதயம் வருடும் இசையில் சுரமாய் இருப்பவள்
இதமாய்த் தழுவும் இயற்கை காற்றாய் இணைபவள் !
ஈரடிக் குறளின் இனிய நெறியின் இயல்பினள்
ஈர மதியாய் இரவினில் குளிர்ந்தே இனிப்பவள் !
உறங்கும் தருணம் உலவும் கனவில் உறைபவள்
உறவாய் என்னுள் உரிமை கூட்டும் உயிரவள் !
ஊருடன் ஒத்தே உறவுகள் பேணும் உயர்ந்தவள்
ஊருணி நீராய் உபயம் அளிக்கும் ஊற்றவள் !
எதிலும் முயன்றே எழுச்சி காண்பாள் என்னவள்
எதிர்த்துப் பேசா எழிலாள்! பழகிட எளியவள் !
ஏற்றத் தாழ்வு என்றும் பாரா ஏலவள்
ஏற்றி விட்ட ஏணியை மதித்து ஏற்பவள் !
ஐயம் இன்றி ஐந்தாம் வேதம் அறிந்தவள்
ஐயனைத் துதித்தே ஐம்புலன் அடக்கும் அரியவள் !
ஒளிவு மறைவு ஒன்றும் இல்லா ஒழுங்கவள்
ஒளியாய் விளங்கி ஒல்லார் தம்மை ஒழிப்பவள் !
ஓங்கார மந்திரம் ஓதிடும் போதில் ஒளிர்பவள்
ஓங்கிடும் பண்பில் ஒற்றுமை பேணும் ஓடையவள் !
ஔவை சொன்ன ஔவியம் பேசேல் அறிந்தவள்
ஔவை நோன்பை ஆடித் திங்கள் அனுசரிப்பாள் ....!!!