மர்ம ரகசியங்கள்
மரணத்தின் மடியிலே
தினம் ஒரு விளையாட்டு...
கத்தி தலைக்கு மேல் தொங்கினாலும்
நிம்மதியான தூக்கம் தினமும்...
இறப்பின் நிச்சயம் தெரிந்தும்
மறந்து விடுகிறது பல நேரம்...
அசையாத உடல் கண்டால் மட்டும் நம்மை
அசைத்துப் பார்க்கும் கொஞ்சம்...
திக்கு திக்கு என்று அடிக்கும் இதயம்
திக்குத்தெரியாமல் என்று நிற்குமோ?
மரண பயம் வருவது இயற்கை தான்...
ஆனால் ஏன் சாக வேண்டும்?
மரணத்திற்குப் பின் என்ன நடக்கும்?
உடல் எரிந்து பட்டாலும்
உயிர் என்னவாகும்?
மறுபிறவி சாத்தியமா?
இல்லை வெறும் கட்டுகதையா?
இறந்தால் உண்மை தெரியுமோ, தெரியாதோ?
எல்லாவற்றையும் விட்டுவிட்டு போகவேணுமாம்
இதென்ன கூத்து?
இயற்கையின் அகங்காரமா?
அநியாயம்...
அன்பையும் பாசத்தையும்
முதலீடு செய்துவிட்டோம்...
எல்லோரையும் எல்லாப் பொருளையும்
திரும்பி பார்க்காமல் போக முடியுமா?
இடத்தைக் காலி பண்ணினால்
ஒரு தடம் கூட மிஞ்சாதே...
மரணத்தைப் பற்றியே மாய்ந்து போகாமல்
விட்டுவிட்டாலும் கூட...
இப்போது என்ன தான் நடக்கிறது?
உயிரோடு என்ன செய்து கொண்டிருக்கிறோம்?
உயிர்களின் விளையாட்டில்
நான் எதற்கு? நீ எதற்கு?
எத்தனை உறவுகள், உணர்ச்சிகள்...
அத்தனையும் நம்மை ஆட்டிப்படைக்க
அஞ்சாமல் நடமாடும்
அலை பாயும் நெஞ்சங்கள்...
புது உயிரின் வரவைக் கொண்டாடும் நாம்
போகும் உயிரைப்பற்றி என்ன சொல்ல?...
பேசும் உடம்புகளோடு உறவாடும் உயிர்கள்...
பேசாத உடம்புகளோடு உறவாடும் உயிர்கள்...
விந்தையிலும் விந்தை
தன்னைப் பார்த்து தானே வியப்பது...
போவது எதற்கோ எங்கோ
என்று நினைத்து ஆச்சர்யப் படுவதா?
இருப்பது எதற்கோ இங்கே
என்று நினைத்து ஆச்சர்யப் படுவதா?
சாவும் புரிவதில்லை
வாழ்வும் புரிவதில்லை
வாழ்ந்து விட்டு சாவோம்
இரண்டையும் கொண்டாடுவோம்...
பக்குவப்பட்ட மனமிருந்தால்
புண் படத் தேவையும் இல்லை...
புதுப் புது சாலையில் எந்நாளும்
புரியாத பயணங்கள்...