காதல்
காதல் என்ன கடைச் சரக்கா ?
தா வென்றதும் தருவதற்கு .....
உன்னைக் காதலிக்கிறேன் என்றதும்
ஓடி வந்திடுமா காதல் ?
விழிவழி சென்று இதயத்தில் நுழைந்து
உணர்வினில் கலந்து ஊனினை உருக்கி
பசியினை மறந்து தூக்கத்தை இழப்பதல்லவா காதல்.
இதயங்கள் இரண்டும் திறவாமல்
இதழ்தனை விரித்து மலர்ந்திடுமா காதல்.
தானாக மலர்வதல்லவா காதல்.
தடிகொண்டு தாக்கினால் மலர்ந்திடுமா ?
தட்டினால் திறப்பதற்கு மரக்கதவா ?
முட்டினாலும் பல நேரங்களில் திறக்காத மனக்கதவு !
நிலையில்லா வாழ்வில்
நிறைவினைத் தருவது காதல் !
குறைவின்றி அதனைக்
கொண்டாட வேண்டுமே தவிற
குழியினில் தள்ளி குரல் வளை
நெறிப்பதா காதல் ?
கட்டாயப் படுத்துவதா காதல்?-மனதிற்குள்
கட்டுப் படுவதே காதல்.
உண்மைக் காதல் உயிரையும் கொடுக்கும்!
என்றுமே உயிரை எடுக்காது.
காதல் என்பது தனிமனிதச் சுதந்திரம்-அதை
மற்றவர் மேல் திணிப்பது என்ன தந்திரம்.
பெண்கள் என்றும் அடிமைகளா?- ஆடவர்
காதலில் மயங்கிடும் பதுமைகளா ?
எண்ணும் சுதந்திரம் அவருக்குண்டு-அதை
என்றும் மதித்தால் சிறப்புண்டு .
சென்னையிலே ஒரு சுவாதி !
வகுப்பறையில் ஒரு சோனாலி !
புனித மாதா முன்னாலே ஒரு பிரான்சிகா!
வீட்டிற்குள்ளே ஒரு நவினா! ஒரு தன்யா !
பேரூந்து நிறுத்தத்தில் ஒரு மோனிகா என்று
கல்லறைக்குள் போக வைப்பதா காதல் ?
வாழ வைப்பது காதலா ? இல்லை
வீழ வைப்பது காதலா ?
வாழ வேண்டும் – அந்த வாழ்வினில்
காதலை நாடவேண்டும்- அந்தக் காதலில்
உறவினைத் தேடவேண்டும் – அந்த உறவினில்
உண்மையாய் வாழவேண்டும்-அந்த உண்மையால்
உலகமே என்றும் புகழவேண்டும்.!
காதலைத் தேடு ! தப்பில்லை!
எட்டா பழமென்றால் கொட்டாவி விடாதே !
முடவனைப் போலும் கொம்புத்தேனுக்கு ஏங்காதே !
காதலுக்குக் கண்ணில்லை என்றாலும்
கடமையினை மட்டும் என்றும் மறக்காதே !
கிட்டாதாயின் சட்டென மற
முட்டி போதும் மூடனாய் மாறாதே-வாழ்வைத்
தட்டிப் பறிக்கும் தவறினைச் செய்யாதே ?
ஈன்றவர் தன்னை நினைத்துப் பாரு!
உன்னை உனக்கே புரியும் பாரு !
பாரதியே இவர்களை மன்னித்து விடு
நீ பாடிய
காதல் காதல் காதல் காதல் போயின்
சாதல் சாதல் சாதல் என்பதைத்
தவறாகப் புரிந்து கொண்டு விட்டார்கள்.
*************************************