தினமணி கவிதைமணி தந்த தலைப்பு நீதியைத் தேடி கவிஞர் இரா இரவி

தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !

நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !

நீதியைத் தேடி அலைய வேண்டிய காலம் வந்தது
நீதிக்காக உயிர் துறந்த மன்னன் வாழ்ந்த பூமி இது !

தவறு செய்திட்ட மன்னனுடன் ராணியும் சேர்ந்து
தன் உயிரை மாய்த்திட்ட மாண்புள்ள பூமி இது !

குடிமக்களுக்கு மட்டுமல்ல பசு வந்து மணியடித்ததும்
கேட்டு அறிந்து நீதி வழங்கிய மண் நமது மண் !

தவறும் செய்தது தன் மகன் என்றும் தெரிந்தும்
தண்டனை வழங்கிய மன்னன் வாழ்ந்த பூமி இது !

புறாக்களுக்காக தன் சதையை அறுத்து வழங்கிய
பண்டைய மன்னன் வாழ்ந்த வசந்த பூமி இது !

தாமதமான நீதியும் அநீதி என்று அறிவித்த
தேசம் நம் அழகிய தேசம் என்பதை உணர்வோம் !

கோடிகள் திருடிய கேடிகள் எல்லாம் நம் நாட்டில்
கைதாகி பிணையில் வெளி வந்து விடுகின்றனர் !

பசியின் கொடுமையால் ரொட்டி திருடிய ஏழையோ
பாழும் சிறையில் பரிதவித்து வருகிறான் !

பணக்காரனுக்கு ஒரு நீதியும் நம் நாட்டில்
பாமரனுக்கு ஒரு நீதியும் வழங்குதல் முறையோ ?

நடிகர் மது அருந்தி மகிழுந்து ஒட்டி கொலை செய்தார்
நிரபராதி என்று விடுதலையாகி விட்டார் !

நீதி தேவதையின் கண்ணில் கறுப்புத் துணி
கட்டியதன் காரணம் என்ன தெரியுமா ?

பணக்காரன் ஏழை என்ற பாரபட்சமின்றி
பார்க்காமலே நீதி வழங்க வேண்டும் என்பதற்குத்தான் !

குற்றவாளியை குற்றமற்றவர் என்றும்
குற்றமற்றவரை குற்றவாளி என்றும் கூறுவதை !

நீதி தேவதை கண்டு கொள்ளாமல் இருக்க
நீதி தேவதைக்கு கட்டவில்லை கருப்புத்துணி !

ஒரு அறிஞர் பகலில் கையில் விளக்குடன்
ஒரு மனிதனாவது தென்படுவானா எனது தேடினார் !

இன்று நம் காலத்தில் நீதி கிடைக்குமா
என்று தேடி அலைய வேண்டிய அவல நிலை !

இன்றும் கண்ணியமான நீதிமான்கள் பலர் உள்ளனர்
இழிவான கண்ணியமற்றவர்களும் சிலர் உள்ளனர் !

கருப்பு ஆடுகளை உடன் களை எடுப்போம்
கண்ணியமானவர்களுக்குக் கரம் கொடுப்போம் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (20-Sep-16, 7:39 pm)
பார்வை : 76

மேலே