சட்டம்

உப்பின்றி உணவின்றி ஊருக்குள் ஏழை
ஒருநேர சோற்றுக்கு வாட – எங்கோ
ஒப்புக்கு உணவுண்ண ஒருகோடி பணமும்
ஒருநேரம் வீணாக்கிப் போட

தப்பிக்கும் வழிதன்னை தமக்காக அமைத்து
திருடுவதில் ஈடுபடும் கூட்டம் – வாழ்வில்
தப்பெல்லாம் தப்பின்றி தரமாக செய்ய
தனவந்த ராக்கிவிடும் தேட்டம்

சட்டத்தின் அழுக்கான சட்டையினை அகற்றிச்
சலவைக்குப் போட்டாலும் எடுத்து – அழுக்குச்
சட்டத்தைக் கொண்டதனைச் சகதிக்குள் தள்ளி
சட்டென்று அழுக்காக்கும் திருட்டு

சட்டத்தின் ஒட்டைவழி சமுதாய மெங்கும்
சாணக்கிய நீரூற்றும் கொள்ளை – தேசம்
நட்டத்தில் வீழ்வதற்கு நச்சுச்செடி வளர்த்து
நாசத்தை விளைவிக்கும் தொல்லை

நாட்டுவளம் அத்தனையும் நாசூக்காய்த் திருடி
நாளைவரும் சந்ததிகள் தெருவில் – பிச்சைக்
கேட்கும்படி செய்வோரைக் கேட்பாரும் இன்றிக்
கிடக்குதிங்கே இலஞ்சமெனும் உருவில்

பாமரனை சுரண்டுகின்ற பலமுள்ள திட்டம்
பலவற்றைக் கடைபிடிக்கும் வேந்தர் – நாட்டில்
ராமனைப்போல் வேசமிட்டு ராத்தூக்க மின்றி
இரகசியமாய் பொருள்சேர்க்கும் சாந்தர்

தண்டனைகள் என்பதெல்லாம் தவறிழைபோர்க் கன்றி
தன்மானமுள் ளோர்க்கென்று கொள்ளும் – கள்வர்
தண்டனைகள் அனுபவிக்க தகுந்ததொரு சட்டம்
தனைவகுத்தல் தானவரைக் கொல்லும்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (26-Sep-16, 2:14 am)
பார்வை : 89

மேலே